புது தில்லி: தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களில் 18 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக, சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவற்றில் அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததன் காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.
அதே சமயம் திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ போஸ் உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடுத்த வழக்கும் உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது.
பின்னர் கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்றதன் காரணமாக ஓசூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா ரெட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் மொத்தம் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பில், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிளுக்கு மட்டும் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி ஒத்திவைத்தது. இதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பின்னர் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
பின்னர் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தொடரப்பட்டிருந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களால் வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் - ஏப்ரல் 22
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் - ஏப்ரல் 29
வேட்பு மனு மீதான பரிசீலனை - ஏப்ரல் 30
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மே 2
தேர்தல் நாள் - மே 19
வாக்கு எண்ணிக்கை - மே 23
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது தமிழகத்தில் காலியாக இருந்த அனைத்துத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.