தமிழ்நாடு

"டிக் டாக்' செயலி மீதான தடை நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

DIN

 "டிக் டாக்' நிறுவனம் அளித்த உறுதிமொழியை ஏற்று "டிக் டாக்' செயலி மீதான தடை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

நாடு முழுவதும் பிரபலமாகி உள்ள "டிக் டாக்' செயலியை இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த  பிப்ரவரி மாதம் "டிக் டாக்' செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு  தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் "டிக் டாக்' செயலியை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி "டிக் டாக்' செயலியை தடைசெய்ய உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, "டிக் டாக்" செயலியை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் "டிக் டாக்' விடியோவை தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்தது. 
இந்நிலையில்,  "டிக் டாக்' நிறுவனம், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "டிக் டாக்' நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.  

இந்நிலையில்,  இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிமன்றம் விஞ்ஞானப் பூர்வமாக அணுகவும், ஆலோசனை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் அரவிந்த் தத்தாவிடம்,  "டிக் டாக்' செயலி குறித்த விளக்கம் பெறப்பட்டது. பின்னர் "டிக் டாக்' நிறுவனம் தரப்பில், "டிக் டாக்' செயலியில் இருந்த ஆபாசமான 60 லட்சம் விடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச அளவில் 13 வயது நிரம்பியவர்கள் "டிக் டாக்' செயலியை பயன்படுத்தலாம் என்ற விதி உள்ளது. இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள்தான் பயன்படுத்த முடியும் என்ற விதியும், பல பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களின் தவறான விடியோக்கள் பதிவேற்றம் செய்யமுடியாத அளவிற்கு பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி ஆபாசம் மற்றும் வன்முறையான விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டால் உடனடியாக அதை நீக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து "டிக் டாக்' நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  "டிக் டாக்' செயலி மீதான தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேவேளையில், அவர்கள் அளித்துள்ள உறுதிமொழியை மீறும் வகையில் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை "டிக் டாக்' நிறுவனம் சந்திக்க நேரிடும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT