தமிழ்நாடு

சத்துணவு முட்டை கொள்முதல் அரசாணை ரத்து: தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு 

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது

DIN

சென்னை: தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 58 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு முட்டை வழங்குவதற்காக தினசரி சராசரியாக 45 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளைத் தனியாரிடமிருந்து வாங்குவதற்கு டெண்டர் அறிவிப்பாணை 2018 ஆகஸ்ட்-இல் வெளியிடப்பட்டது. அதில் தமிழகம் அல்லாத பிற மாநில முட்டை உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க இயலாது எனவும், தமிழகத்தை  6 மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த பகுதி முட்டை உற்பத்தியாளர்கள் தான் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதனால் குறைந்த விலையில் முட்டை விநியோகம் செய்பவர்கள் டெண்டரில் பங்கேற்க இயலாமல் போகும் நிலை உருவாகும். அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே அந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இம்மனுக்கள் மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில் முட்டை கொள்முதல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து முட்டை கொள்முதல் செய்ய முடியாததால் சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது எனக் கூறி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இம்மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கான முட்டை கொள்முதல் ஒப்பந்தப் புள்ளி தொடர்பான அரசாணை முறையாக இல்லை, பாகுபாடுகள் உள்ளன எனக்கூறி 21.02.19 அன்று அதை ரத்து செய்தார். மேலும் முட்டை கொள்முதல் தொடர்பாக புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றும் அதுவரையிலும் சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில் இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனி நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழநதைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் ஆகிய இருவரும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவானது, வெள்ளியன்று நீதிபதிகள் பவானி மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுஅரசின் கொள்கை முடிவு என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார். அதேநேரம் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிறுவனங்கள் மீண்டும் முட்டை சப்ளை செய்ய அனுமதிப்பது சட்ட விரோதம் ஆகாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இது ஒரு இடைக்கால ஏற்பாடுதான் என்று நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விளக்கம்  தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT