தமிழ்நாடு

ஆகஸ்ட் 7-இல் நீட் பயிற்சிக்கான தகுதித் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

DIN

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு ஆகஸ்ட் 7 -ஆம் தேதி தகுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 தகுதித் தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. இந்தத் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நீட் மற்றும் ஜே.இ.இ. போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
 மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்களைத் தயார்படுத்தும் விதமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 100 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு ஜனவரிக்கு மேல் 412 மையங்களாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 மேலும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும் எனவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது எனவும் அவர் கூறினார்.
 இந்தநிலையில் இந்தப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கான தகுதித் தேர்வை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நீட் மற்றும் ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 தகுதித் தேர்வுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு: இந்தநிலையில் இந்தத் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுக்கான பயிற்சியில் சேர ஆகஸ்ட் 7-இல் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 தொடக்கத்தில் நடைபெறும் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தால் அந்த மாணவரின் எதிர்கால மருத்துவக் கனவு நிறைவேறாது. அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசே வடிகட்ட தீர்மானிப்பது வேதனையளிக்கிறது. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியளிப்பது அரசின் கடமை. எனவே அனைத்து மாணவர்களுக்கும் நீட் மற்றும் ஜே.இ.இ. பயிற்சி வழங்கிட ஏதுவாக பள்ளிக் கல்வித் துறையின் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT