தமிழ்நாடு

முற்பட்ட ஜாதியினர் கணக்கெடுப்புக்குப் பிறகே புதுவையில் பொருளாதார இடஒதுக்கீடு அமல்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

DIN

முற்பட்ட ஜாதியினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே புதுவையில் பொருளாதார இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள முற்பட்ட ஜாதியினருக்கான பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு, புதிய கல்விக் கொள்கை மசோதா ஆகியவை குறித்து புதுவை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புதிய கல்விக் கொள்கையைப் பொருத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. மாநிலத்துக்கு மாநிலம் கல்வித் திட்டங்கள் மாறும். அதற்கேற்க கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என பெரும்பாலான அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
 இந்தக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துகளும் கேட்கப்படும். அனைத்துக் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். பொருளாதார ஒதுக்கீட்டைப் பொருத்தவரை புதுவையில் வசிக்கும் முற்பட்ட ஜாதியினர் எவ்வளவு பேர், அவர்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எவ்வளவு பேர் என்பதைக் கணக்கீடு செய்த பிறகுதான் பொருளாதார ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்.
 எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அமல்படுத்தினால், பிற சமூக மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
 எனவே, முற்பட்ட ஜாதியினர் கணக்கெடுப்பும் சாத்தியமானதுதான். இந்தக் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்றார் அவர்.
 கூட்டத்தில் சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, தலைமைச் செயலர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, புதுவை காங்கிரஸ் துணைத் தலைவர் நீல.கங்காதரன், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., பாஜக பொதுச் செயலர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம், முன்னாள் செயலர் இரா.விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலர் ராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ.பொழிலன், மதிமுக மாநில அமைப்பாளர் கபிரியேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
 கூட்டத்தில் பாஜகவை தவிர, அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் புதுவையில் அமல்படுத்தக் கூடாது என்றே கருத்து தெரிவித்தனர்.
 இதேபோல, சென்டாக் மூலம் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT