தமிழ்நாடு

நீட் தேர்வு மசோதாக்கள் நிராகரிப்பு:  சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசு தகவல்

DIN


தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரிய இரண்டு மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாக, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் சேர தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதித் தேர்வில் வெற்றிப் பெறவேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.  இதற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சட்டமசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி,  பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழக அரசின் இரண்டு மசோதாக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மசோதாக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், எந்தவிதமான காரணங்களுமின்றி தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. 

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்த நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும், மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கக் கோரி, தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி முதல் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி வரை 11 கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது என வாதிட்டார். இதனையடுத்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT