தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.122 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

DIN


தமிழகத்தில் ரூ.122 கோடி மதிப்பில் உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் அவர் திறந்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கத்திவாக்கத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணி, மாநகராட்சி கட்டடங்களின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் தகடுகள் திட்டப் பணி, சைதாப்பேட்டையில் சலவையாளர்களுக்கு ஓய்வறைகள், சலவை அறைகள், சென்னை ராமாபுரத்தில் சுகாதார மைய அலுவலகக் கட்டடம், சென்னை பெருங்குடியில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட பூங்கா ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
பிற இடங்களில்...: சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் வாரச்சந்தை அருகே கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர் தங்கும் விடுதிக் கட்டடம், ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ஈரோடு சிவகிரி பேரூராட்சியில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் என ரூ.122 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
விளையாட்டுத் துறை திட்டங்கள்: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுதளத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஹாக்கி பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்கும் அறைகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள், புதுக்கோட்டை, மதுரை மாவட்ட விளையாட்டரங்குகளில் விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
பணிநியமன உத்தரவு: நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையில், நில அளவை குறியீடு செய்தல், நில ஆவணங்கள் பராமரித்தல், நில உரிமை, அதில் ஏற்படும் மாற்றங்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தொய்வின்றி நடைபெற 11 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT