தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றலை உள்ளிட்ட கலைகளை வளர்க்கும் வகையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.
எட்டாம் ஆண்டான நிகழாண்டில் இந்த பயிற்சிப் பட்டறை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) தொடங்கி, ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகம் முழுவதுமிருந்து 200 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இலக்கியப் பட்டறையை, தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொடக்கி வைக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் த.சு. ராஜசேகர், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ. விசயராகவன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. கிருஷ்ணன், தியாகராஜர் கல்லூரித் தலைவர் கருமுத்து தி. கண்ணன், நான்காம் தமிழ்ச் சங்கத் தலைவர் குமரன் சேதுபதி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பலர் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் நாள் அமர்வில், தமிழ் வாழ்க்கைப் பணி என்ற தலைப்பில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் பேசுகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை என்ற தலைப்பில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், தமிழ் இலக்கியங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, திரைப்பாடல் இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் பேசுகின்றனர்.
மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை, உரிமை மீட்புகளில் ஊடகங்கள் என்ற தலைப்பில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் உரையாற்றுகிறார். ஆளுமைத் திறன் என்ற தலைப்பில் சோம வீரப்பன், அண்ணாவின் மொழிநடை என்ற தலைப்பில் முனைவர் வீ. ரேணுகாதேவி, தமிழ்மொழி மீட்சி என்ற தலைப்பில் ர. பூங்குன்றன், இஸ்லாமும் இன்பத் தமிழும் என்ற தலைப்பில் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பேசுகின்றனர். நான்காம் நாள் நிகழ்வில், பாரதி பா வின் சாரதி என்ற தலைப்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் இல. கணேசன் பேசுகிறார்.
பயிற்சிப் பட்டறை நடைபெறும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு 7 நாள்கள் தங்குமிடமும், உணவும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்தகவலை, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) ப. அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.