தமிழ்நாடு

சேலத்தில் திராவிடர் கழக பவள விழா: தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு 

DIN

சென்னை: சேலத்தில் செவ்வாயன்று நடைபெறவுள்ள திராவிடர் கழக பவள விழாவில் பங்கேற்க கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பார்கள். அதுபோல, திராவிட உணர்வுமிக்க தமிழர்களின் திசை தேடும் விழிகள் எல்லாம் இப்போது  சீலம் மிகுந்த சேலத்தை மட்டுமே  நோக்கி இருக்கிறது. காரணம், நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழா சேலம் மாநகரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எந்த சேலத்தில் 'திராவிடர் கழகம்' என்ற சித்தாந்தப் பெயர் சூட்டப்பட்டதோ, அந்த சேலத்தில் எழுச்சியூட்டிடும் சிறப்பு விழா.

ஆகஸ்ட் 27 அன்று காலை 9 மணிக்கு, சேலம் அம்மாப்பேட்டை அன்னை மணியம்மையார் நினைவரங்கத்தில் தொடங்கும் நிகழ்ச்சி, மாலையில் கருங்கடல் போன்ற பேரணியால் எழுச்சியும் ஏற்றமும் பெற்று, சேலம் கோட்டை மைதானத்தில் நிறைவு விழா என்ற நினைவில் நிரந்தரமாகத் தங்கும் விழா நிகழவிருக்கிறது. தாய்க்கு விழா என்றால் தனயர்கள் இல்லாமலா? மானமிகு ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் நிறைவுரையாற்றும் நல்வாய்ப்பினைப்  பெற்றிருக்கிறேன்.

தோழமைக் கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மதிப்பிற்குரிய கே.எஸ்.அழகிரி அவர்கள்,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் அன்பிற்கினிய பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீ அவர்கள் என சமூகநீதியைக் காத்து, களத்தில் நிற்கும் தளகர்த்தர்கள் பலரும் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் பங்கேற்கிறோம்.

தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒரே மாதிரி சிந்தித்து செயலாற்றியதன் விளைவுதான், 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்டு, திராவிடர் கழகம் என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞரின் குருதியினால் கொடி உருவாக்கம் பெற்ற அந்த மகத்தான இயக்கத்திற்கு இன்று பவள விழா.

அந்தச் சுடரை உயர்த்துவோம்! இனப்பகை எனும் இருட்டை விரட்டுவோம்! ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்ளும் வலிமையைப் பெருக்கும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவினை நமது பயிற்சிக்களமாக்குவோம். மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுரைகளுக்குச் செவி மடுப்போம். தன்மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT