சென்னை: சென்னையில் மின்கல பேருந்து சேவை தொடக்கம் என்பது காலநிலை நெருக்கடியை சமாளிக்க நல்ல தொடக்கம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரலாற்றில் முதன்முறையாக சென்னையில் மின்கல பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், அதன் வழியாக புவிவெப்பமயமாதலுக்கும் வாகனங்கள் கணிசமாக பங்களிப்பதாக எச்சரிக்கை குரல்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.
உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் புவிவெப்பமயமாதல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கி வருகிறது. காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்காக சென்னையில் செயல்படுத்தப்பட வேண்டிய 20 அம்சத் திட்டத்தையும் பா.ம.க. மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அவற்றில் முதல் மூன்று முக்கிய யோசனைகளாக கூறப்பட்டிருந்தவை போக்குவரத்தில் புகைக்கரியை ஒழிக்க வேண்டும்; நகர்ப்புற சாலைகளை புழுதியற்றதாக மாற்ற வேண்டும்; மின்கல வாகனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பவை தான். இந்த 3 யோசனைகளுக்கும் செயலாக்கம் கொடுக்கும் வகையில் சென்னையில் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரையிலான வழித்தடத்தில் இயங்கும் மின்கல பேருந்து போக்குவரத்தை அரசு இன்று தொடங்கியுள்ளது.
டீசலை எரிபொருளாகக் கொண்டு செயல்படும் பேருந்துகள் புகைக்கரியை அதிகமாக வெளியிடுவதால், வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு தான் புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது. புகைக்கரி வெளியிடும் பேருந்துகளுக்கு மாற்றாக மின்கல பேருந்துகளை முழு அளவில் இயக்கத் தொடங்கும் போது புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த இயலும். சென்னையில் முதல்கட்டமாக ஒரே ஒரு மின்கல பேருந்து இயக்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் பெருமளவில் உதவும். எனவே, அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும். அத்துடன், பா.ம.க. ஏற்கனவே வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழக சட்டப்பேரவையில் காலநிலை நெருக்கடி நிலை பிரகடனத்தை வெளியிட்டு நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் புவியைக் காப்பதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.