முகப்பு
தமிழ்நாடு

7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தீர்மானம் தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:57 AM
பகிர்:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தீர்மானம் தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் கோரி தமிழக ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. முன்கூட்டியே விடுதலை செய்யும் தீர்மானம் தொடர்பான பரிந்துரைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்தார்.   

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறைச் செயலாளர் சார்பில் வேலூர் மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்தார். அந்த பதில்மனுவில், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள பரிந்துரை தமிழக ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.  ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமை கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும். 

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனையைக் குறைப்பது உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. நீதிமன்றம், முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க மட்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.