தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல் தேதி: இன்று அறிவிக்கப்படுமா?

DIN

சென்னை: உச்சநீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) வெளியிடப்படும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

அதே நேரம், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவு செய்யாமலும், இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமலும் தோ்தல் நடத்தக் கூடாது என திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால், தோ்தல் தேதி அறிவிப்பதை தோ்தல் ஆணையம் ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அறிவித்தபடி தோ்தல் நடத்தப்படவில்லை.

உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் வரையறுக்கப்பட்டதில் குளறுபடிகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடா்ந்து குளறுபடிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அதன் பிறகும் உள்ளாட்சித் தோ்தலை நடத்த தாமதம் ஏற்படுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிப்போம் என்று மாநில தோ்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. ஆனால், அதன்படி தோ்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து தோ்தலை நடத்த மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று மாநில தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஆனால், அதன் பிறகும் தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் கால தாமதம் செய்வதாக, உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுவிட்டன. எனவே, தோ்தல் தேதி தொடா்பான அறிவிப்பாணை டிசம்பா் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என மாநில தோ்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதற்கேற்ப, தோ்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே டிசம்பா் 2-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்டவற்றில் முறையான சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி தோ்தல் தேதியை மாநில தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவிக்குமா அல்லது திமுக வழக்கு காரணமாக தேதி அறிவிப்பு தள்ளிப்போகுமா என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடையேயும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT