தமிழ்நாடு

மேலும் இரு நாள்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (டிச.3,4) மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல துணைத் தலைவர் எஸ்.பாலச்சந்தின் திங்கள்கிழமை கூறியது:  தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. மேலும், தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (டிச. 3, 4) மழை பெய்யக்கூடும்.

பலத்த மழை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். 

அடுத்த வரும் 3 நாள்களுக்கு தென் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும். வட தமிழகத்தில் சில இடங்களில் மழை மட்டும் பெய்யும். தென் தமிழக கடலோர பகுதியில் தற்போது காணப்படுவது காற்றழுத்தத் தாழ்வு நிலையாகும். இதனால் தான் மழை கிடைக்கிறது. தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இருக்கிறது. 

இது மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுவடைய  உள்ளது. அது தூரத்தில் இருந்தாலும் அதை நோக்கி கிழக்கு திசை வீசும் என்பதால் தமிழகத்துக்கு மழை கிடைக்கும்.

11 சதவீதம் அதிகம்:  தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாக உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில்  அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 360 மி.மீ. ஆனால், இதுவரை 400 மி.மீ. மழை கிடைத்துள்ளது.  இது இயல்பை விட 11 சதவீதம் அதிகம்.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகரில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.  

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், இலங்கையை யொட்டிய கடற்கரையில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ.  வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த வரும் 2 நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகம், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 3 இடங்களில் மிக பலத்த மழையும், 17 இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கரூர் மாவட்டம் பாலவிடுதியில் 130 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 100 மி.மீ., செம்பரம்பாக்கம், நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் தலா 90 மி.மீ., தேனி மாவட்டம் பெரியகுளம், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், தாமரைப்பாக்கம், கொரட்டூரில் தலா 80 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT