தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவில், 'மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தலை ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டாக பிரித்து நடத்த முடிவு செய்தது.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்தது.

முதல்கட்டத் தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் இன்று(டிசம்பர் 30ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெறவில்லை

தமிழகத்தில் கடந்த 1996, 2001, 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்குச் சேர்த்தே நடத்தப்பட்டது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தனித்தனியாக நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மேலும், ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி அதன் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட மனுவுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டாலும் முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுகிறது. எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த மனு விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலை 3 மாத காலத்துக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவுகளை வெளியிட எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி அமைமைப்புகளுக்கானத் தேர்தல் முடிவுகளை தனித்தனியாக வெளியிட எந்த தடையும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT