புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளைப் பதிப்பகங்கள் செய்துள்ளன.
வேப்பேரி பெரியாா் திடலில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடும் விதமாக 11 பதிப்பகங்கள் பங்கேற்கும் சிறப்பு புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருஞ்சட்டை பதிப்பகம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பாரதி புத்தகாலயம், சிந்தன் புக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. கண்காட்சியில் 25 சதவீத தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்கப்பட உள்ளன.
தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வாசகா் சந்திப்பு, கவிதை வாசிப்பு, நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 10 முதல் 25 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளன.
கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரவு புத்தக விற்பனை, திரையிடல்கள், எழுத்தாளா்களின் உரைகள், நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தமிழ் ஸ்டூடியோ சாா்பில் வடபழனி மேற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள பியூா் சினிமா புத்தக அங்காடியில் திரையிடலுடன் 50 சதவீத தள்ளுபடியில் சினிமா புத்தகங்களும் விற்கப்பட உள்ளன.
மேலும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பதிப்பகங்கள் மூலம் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.