முகப்பு
தமிழ்நாடு

குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: 16 நாட்களில் குற்றவாளியைக் கைது செய்த போலீஸ்

பெருங்குடிப் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 16 நாட்களில் குற்றவாளியை கைது செய்துள்ளது சென்னை காவல்துறை.

Updated On : 6 பிப்ரவரி, 2019 at 12:46 PM
பகிர்:


சென்னை: பெருங்குடிப் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 16 நாட்களில் குற்றவாளியை கைது செய்துள்ளது சென்னை காவல்துறை.

கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், அவரது கணவர் ஜாஃபர்கான்பேட்டையில் வசித்துவந்த பாலகிருஷ்ணன் சினிமாவில் உதவி இயக்குநராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னை அருகே பெருங்குடியில் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. சென்னை முழுவதும் சேகரிக்கப்படும் குப்பை லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. இந்நிலையில் இங்கு திங்கள்கிழமை மாலை சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதை குப்பைக் கிடங்கு ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு பெண்ணின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட இரு கால்கள், வலது கை ஆகியவை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த உடல் பாகங்களை ஆய்வு செய்தனர். கைப் பகுதியில் சிவன், பார்வதி படமும், ஒரு டிராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் போலீஸார், அந்த உடல் பாகங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார், வழக்குப் பதிவு செய்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார், அந்த பெண்ணின் உடல் எங்கு வீசப்பட்டது, அவரை கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர்.

முதலில், பெண்ணின் கைவிரல் ரேகை மூலம் ஆதார் விவரத்தைத் தேட முயன்றனர். ஆனால், கொலையுண்டு பல நாட்கள் ஆனதால் கைவிரல்  ரேகையைப் பெற முடியாமலும், எந்த துப்பும் துலங்க முடியாமலும் காவல்துறையினர் திணறினர்.

பிறகு, குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட குப்பையைக் கொண்டு துப்புத் துலங்க முயன்றனர். இதில் அங்கு கொட்டப்பட்ட குப்பை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீஸார், கோடம்பாக்கம் பகுதியில் பெண்கள் காணாமல் போயுள்ளனரா என விசாரணையில் ஈடுபட்டனர். 

கோடம்பாக்கம் பகுதியில் காணாமல் போன பெண்களைப் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்தனர். இதில், அப்பகுதியில் சந்தியா என்ற பெண் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு, கொலையுண்ட பெண்ணும், சந்தியாவும் ஒருவரே என்பது நிரூபிணமானது.

சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணா என்பதும், அவர் சினிமாவில் உதவி இயக்குநராக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் சௌகார்பேட்டையில் வசித்து வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தியாவும், அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதும், விவகாரத்துக் கோரி இருவரும் நீதிமன்றத்தை நாடியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

பாலகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்திய பிறகே, இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பது தெரிய வரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.