சென்னை: மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் (பிப்.13) இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏஜி.டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டம் நிறைவடைந்தது.
இதையடுத்து, மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் திங்கள்கிழமை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், சைதாப்பேட்டை - சின்னமலை இடையே உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் அந்தப் பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனால் மெட்ரோ ரயிலில் ஆர்வத்துடன் பயணிக்க வந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து நான்கரை மணிநேரத்துக்குப் பிறகு உயர்நிலை மின்கம்பியில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (பிப்.12) பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ந்த மக்கள் அதிக அளவில் மெட்ரோவில் பயணம் செய்தனர்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் (பிப்.13) இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.