முகப்பு
தமிழ்நாடு

தமிழிசைச் சாரல் இசை விழா நாளை தொடக்கம்

 தமிழிசைச் சாரல் இசை விழா சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் அருகில் உள்ள ரசிக ரஞ்ஜனி சபாவில் (ஆர்.ஆர்.சபா) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

Updated On : 14 பிப்ரவரி 2019, 2:52 am IST
பகிர்:


 தமிழிசைச் சாரல் இசை விழா சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் அருகில் உள்ள ரசிக ரஞ்ஜனி சபாவில் (ஆர்.ஆர்.சபா) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இது தொடர்பாக ஆர்.ஆர். சபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
ஆர்.ஆர். சபா ஆர்ட்ஸ் அகாதெமி நடத்தும் தமிழிசைச் சாரல் இரண்டாமாண்டு இசை விழா மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவில் பிப்.15 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.  விழா நடைபெறும் நாள்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கௌமாரம்,  சைவம்,  சாக்தம், வைணவம் ஆகிய தலைப்புகளில் உரை மற்றும் அது தொடர்பான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
இதில் பேராசிரியர் ம.வயித்தியலிங்கன்,  வித்யா கல்யாண ராமன் குழுவினர்,  கே.சிவகுமார்,  பவ்யா ஹரி,  சாமி தியாகராஜன்,  எஸ்.சுந்தர் குழுவினர்,  புரிசை நடராஜன்,  திருத்தணி என்.சுவாமிநாதன் குழுவினர், உலகநாயகி பழனி,  கே.காயத்ரி குழுவினர்,  கிடாம்பி நாராயணன்,  வசுந்தரா ராஜகோபால் குழுவினர், எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்,  விஜயலட்சுமி- சித்ரா குழுவினர், நர்த்தகி நடராஜ் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். 
தொடக்க விழா: முன்னதாக  தமிழிசைச் சாரல் இசை விழா  தொடக்க நிகழ்ச்சி ஆர்.ஆர்.சபாவில் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். அன்றைய தினம் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை காணாபத்யம் தலைப்பில் பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்,  வித்யா கல்யாண ராமன் குழுவினரின் சார்பில் உரை,  இசை நிகழ்ச்சி நடைபெறும்.  விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பொற்றாமரை கலை-இலக்கிய அமைப்பின் தலைவர் இல. கணேசன் சிறப்புரையாற்றவுள்ளார். 
தமிழிசைப்பாடல் மனனப் போட்டி:  இதையொட்டி பிப்.23-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தமிழிசைப் பாடல் மனனப் போட்டி ஆர்.ஆர்.சபா அரங்கில் நடத்தப்படவுள்ளது.  தேவாரம், திருவாசகம், பிரபந்தம், திருப்புகழ், திருவருட்பா ஆகிய தலைப்புகளில் ஏதேனும் மூன்றைத் தேர்ந்தெடுத்து, தலைப்புக்கு ஒரு பாடல் இசைக்க வேண்டும்.  10 முதல் 18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் போட்டியில் பங்கேற்கலாம்.  போட்டிக்கு பிப். 20-ஆம் தேதிக்குள் ஆர்.ஆர்.சபா, எண்.30/1,  சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  இது குறித்து மேலும் தகவல் பெற 99625 03942, 94441 54737 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.