தமிழ்நாடு

ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்: மு.க.ஸ்டாலின்

DIN


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களைத் தண்டிப்பதே முதல் பணியாக இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகள் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில், கலந்துகொள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் காஞ்சிபுரம் வந்தார். இதையொட்டி, மாவட்ட எல்லையான சிறுவேடல் ஒன்றிய செக்கான்குளம், பொன்னேரிக்கரையில் திமுக தெற்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்றனர். 
தொடர்ந்து, சின்னகாஞ்சிபுரத்தில் உள்ள கருணாநிதி பவளவிழா மாளிகையில் அமைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: அண்ணா பிறந்து, வளர்ந்த இடத்தில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகளை திறந்து வைப்பதில் பெருமைப்படுகிறேன். 
மத்தியில் ஆளும் மோடி ஆட்சி பாசிச ஆட்சியாக உள்ளது. மத்தியிலிருந்து தமிழகத்துக்கு வரும் அவர்கள் சதியை தகர்த்தெறிய வேண்டும். நதிகள் இணைக்கப்படவில்லை. அதிநவீன நகரத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கருப்பு பணத்தை மீட்க வில்லை. ரூ.15 லட்சம் தருவோம் என்றவர், இதுவரை ரூ.15 கூட தரவில்லை. மோடி பொய்யான வாக்குறுதிகளை  மட்டுமே அளித்து வருகிறார். 
 ராணுவ பாதுகாப்பு தொழில்நுட்பத் திட்டத்தில் ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் செய்கிறேன் எனக்கூறி வெளிநாட்டு பெருநிறுவனம், தனியார் துறைகளிடம் அத்திட்டம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். மத்தியில் மன்னர் ஆட்சியும், மாநிலத்தில் கொத்தடிமை ஆட்சியும் நடைபெற்று வருகிறது. மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் தளர்ச்சியாகவே உள்ளது. 
உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளோம் என்கிறார்கள். ஆனால்,  21 சதவீதம் உலக முதலீடு குறைந்துள்ளது என்கிறது மத்திய ஆய்வு. ஜிஎஸ்டி வரி ரூ.5,454 கோடியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற தமிழக அரசுக்கு திராணியில்லை. மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலையும், உள்ளாட்சி தேர்தலையும் நடத்துங்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றம் எச்சரித்தும் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.  
21 தொகுதி எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டு, அவ்விடங்களிலும் தேர்தலும் நடத்தவில்லை.  
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எந்தவொரு முறையான மருத்துவ அறிக்கையும் வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்தார். அத்துடன், அவரது நினைவிடத்தில் அமர்ந்துகொண்டு விசாரணை வேண்டும் என்றார். வெறும் வெற்று மருத்துவ அறிக்கை வெளியிட்டு தொண்டர்களை ஏமாற்றியுள்ளனர். எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் இறப்பின் மர்மத்தை, இறப்புக்கான காரணத்தை கண்டறிவோம். அதற்கு காரணமான குற்றவாளிகளைத் தண்டிப்போம். இதுவே எங்களது முதல் பணியாக இருக்கும் என்றார் அவர். 
இதில், முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, நகரச் செயலர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக மாவட்ட, வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT