தமிழ்நாடு

ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

DIN


தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து இருநீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யான முருகன் மீது அவருடன் பணியாற்றிய பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.இதை விசாரித்த விசாகா குழு,  சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப் பரிந்துரை செய்தது.
விசாகா குழுவின் பரிந்துரையை எதிர்த்தும், சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி. முருகன் வழக்குத் தொடர்ந்தார்.
 புகார் அளித்த பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர்,  ஐஜி முருகனை வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,  ஐ.ஜி. முருகன் மீது டிஜிபி ஸ்ரீலக்ஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா குழு விசாரணையை முடித்து இரண்டு வார காலத்துக்குள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 
காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் பணியாளர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைத் தவிர்க்க அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராவைப் பொருத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்ததார். 
உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி. முருகன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக வரும் பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். 
அதுவரை  இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஐ.ஜி. முருகனிடம் சிபிசிஐடி போலீஸாரோ, விசாகா குழுவினரோ விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT