முகப்பு
தமிழ்நாடு

சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சமூக செயற்பாட்டாளர் முகிலன் சென்னையில் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி 2019, 5:55 pm IST
பகிர்:


சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் சென்னையில் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். 

Advertisement

Advertisement

இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் ரயிலில் சென்றுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரை காணவில்லை. மேலும் ஒலக்கூர் ரயில் நிலையம் வரை தொடர்பு எல்லைக்குள் இருந்த அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று முகிலன் ரயிலில் பயணிக்கவில்லை. அவர் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வெளியில் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளது. அதே போல இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள அந்த ரயில் ஒலக்கூரில் நிற்காது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எழும்பூர் ரயில்வே காவல்துறை, எழும்பூர் காவல் துறை மற்றும், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தனர்.

மேலும் முகிலன் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகளை போலீஸாரிடம் ஒப்படைக்க எழும்பூர் ரயில்வே காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.