முகப்பு
தமிழ்நாடு

ஸ்டாலின் பேச்சை கேட்டு வைகோ கண்கலங்கியது எதற்காக தெரியுமா?

தளபதி என அழைக்கப்படும் நானும், கருணாநிதியால் போர்வாள் என அடையாளம் காட்டப்பட்ட அண்ணன் வைகோவும் இங்கே ஒன்று

Updated On : 25 பிப்ரவரி 2019, 12:21 pm IST
பகிர்:


திருச்சி: திருச்சியில் மதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், இனி எப்போதும் தங்களுக்கு துணையாக இருப்பேன் என்று கூறியதைக் கேட்டு வைகோ கண் கலங்கினார்.

மதிமுக சார்பில் கலைஞர் புகழ் போற்றும் விழா மற்றும் கலைஞர் குறித்த புத்தக வெளியீட்டு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மதிமுக சட்டப்பிரிவுச் செயலாளர் வழக்குரைஞர் வீரபாண்டியன் எழுதிய, 'தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை' எனும் புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், தமிழகத்தை சூழ்ந்துள்ள அபாயத்தை முறியடிக்க, மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றார். தன்னிடம் இல்லாத ஆற்றலும், திறமையும் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது என்றும் வைகோ குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் புகழுக்கு மேலும் புகழ்சேர்க்கும் விதமாக வீரபாண்டியன் இந்நூலை எழுதியுள்ளார். திராவிடக் கட்சிகள் ஒன்று சேர்வது சிலருக்குப் பிடிப்பதில்லை. தமிழர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் எதிரிகளால் நம்மை வீழ்த்த முடியாது. 

Advertisement

Advertisement

உங்களால், தளபதி என அழைக்கப்படும் நானும், கருணாநிதியால் போர்வாள் என அடையாளம் காட்டப்பட்ட அண்ணன் வைகோவும் இங்கே ஒன்று சேர்ந்துள்ளோம். திராவிட இயக்கத்தை, இனத்தை, மொழியை, தமிழகத்தைக் காப்பதற்காகவே இப்போது இணைந்திருக்கிறோம்.

'தலைவர் கருணாநிதி வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் வீட்டில் சில வருடங்கள் ஓய்வெடுத்த வந்த நிலையில், அவரைச் சந்தித்த வைகோ, கருணாநிதியின் கையைப் பிடித்து, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்றார் அந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறவேன். தலைவர் கருணாநிதி சொன்ன வார்த்தைகளை வைகோ மீறியதே இல்லை. குறிப்பாக பொடாவில் வைகோ இருந்தபோது வைகோவின் கைகளைப் பிடித்துக் கலங்கியபடி பிணையில் வெளியே வா, உடலை வருத்திக்கொள்ளாதே எனக் கூறினார். அதனையடுத்துதான் வைகோ சிறையிலிருந்து வெளியே வந்தார்' என்று கூறினார். இதைக் கேட்ட வைகோ, மேடையிலேயே கண்கலங்கினார். 

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 'அப்போது நடந்த 2004 மக்களவைத் தேர்தலையொட்டி அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இப்போதும் வைகோ மீண்டும் 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் 40-க்கும் 40 தொகுதிகளைப் பெறப் புயல்வேகப் பயணத்துக்கு வைகோ தயாராகி விட்டார் என்று குறிப்பிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், கூட்டணி ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்து போடுங்கள் என்று கூற வந்துள்ளதாகவும், மத பயங்கரவாதத்தை முறியடிக்கத் தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேர்ந்துகொள்ளும் இணைந்திருக்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.