முகப்பு
தமிழ்நாடு

40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி உறுதி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி உறுதி  என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 4:20 am IST
பகிர்:


மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி உறுதி  என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
சேலத்தில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தல் நேரக் கூட்டணி என்பது மாறி மாறி வைக்கப்படும். அந்த வகையில், இப்போது அதிமுகவோடு, பாமக கூட்டணி வைத்துள்ளது.  பாமக அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு விட்டது. 
அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முற்றிலும் முடிந்த பின்னரே தெரிய வரும். ஒரு மெகா கூட்டணி அமைத்து, மாநிலத்தின் திட்டங்கள் நிறைவேறுவதற்கும், வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்துவதற்கும், புதிய திட்டங்கள் வருவதற்கும், மத்தியில் வலுவான கூட்டணி தேவையாகும்.
கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு தேர்தல் வரும்போது அந்தந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும்தான் கூட்டணி அமைத்திருக்கிறோம். 
கடந்த 2014-இல் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனியாகப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வென்று நாடாளுமன்றத்தின் 3-ஆவது பெரிய கட்சியாக உருவானது. அதேபோல, எங்களுடைய கூட்டணியும் அதிக அளவில் வெற்றி பெறும். தமிழகம், புதுச்சேரியுடன் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிவெற்றி பெறும்.  மேலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவர்.
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: பாஜக, பாமகவுடன் கட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. மேலும் தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளோடு பேசி வருகிறோம்.  
அமமுக பற்றிக் கவலையில்லை: ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன்,  அமமுகவைப் பதிவு செய்தாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. அவர் 543 தொகுதிகளிலும் போட்டியிடட்டும். அதுகுறித்து கவலை இல்லை.
2021-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிதான்: இந்த ஆட்சி 10 நாள் நிற்குமா, ஒரு மாதம் நிற்குமா, 6 மாதம் நிற்குமா என்றனர். இப்போது இரண்டு ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டு நடைபெற்று வருகிறது. அடுத்து 2021-இல் அதிமுக ஆட்சி தான்.
முகிலன் விவகாரம்:  சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் உரிய தகவல் கொடுத்தால் அரசு கண்டுபிடித்து தரும். ஆனால், தனிப்பட்ட ஒருவருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக் கூடாது. இந்த ஆட்சி மீது களங்கம் கற்பிப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டை சொல்கின்றனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.