தமிழ்நாடு

எந்தப் பயமும் இல்லை என்று சொல்லும் முதல்வர் இப்படி செய்யலாமா? ஸ்டாலின் கேள்வி

DIN


எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக் கொண்டே கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை முதல்வர் பழனிசாமி மிரட்டி வருவது நியாயமா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ஒரு முதலமைச்சர் மீதே கொலை, கொள்ளை புகார்கள் சொல்லப்படுகிறது என்றால், நியாயமாகப் பார்த்தால் பதவி விலகி சட்டப்படி நியாயமான நேர்மையான விசாரணையை எடப்பாடி பழனிசாமி துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். உரிய பதிலைச் சொல்லாமல், திசைதிருப்பும் தந்திரத்தைச் செய்து நழுவிக்கொண்டு நாட்களைக் கடத்தி வருகிறார்.

கோடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். முதல்வருக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள்.

2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.

கனகராஜின் அண்ணன் தனபால் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறார். ‘’2017 ஏப்ரல் 28ம் தேதி சேலம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் தென்னங்குடி பாளையம் மலர் மெட்ரிக் பள்ளி அருகே இரவு 8.30 மணிக்கு சாலை விபத்தில் என் தம்பி மரணம் அடைந்ததாக தகவல் கொடுத்தனர். அப்போது கோவையில் இருந்து நான் ஐந்து மணி நேரத்துக்குள் விபத்து நடந்த இடத்துக்கு சென்று விட்டேன். விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. தம்பியின் பைக்கும் விபத்து ஏற்படுத்திய காரும் அங்கு இல்லை. விபத்து நடந்த மூன்றாவது நாளில் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு இடமாறுதல் செய்யப்பட்டார். எடப்பாடியில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமார் தினமும் என் தம்பியிடம் நான்கைந்து மணிநேரம் பேசி இருக்கிறார். என் தம்பிக்கும் எடப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் என்ன தொடர்பு? அவ்வளவு நேரம் பேசுவதற்கு என்ன காரணம்? என் தம்பி மரணத்தில் இப்படி விடை தெரியாத மர்மங்கள் நிறைய உள்ளன” என்று பேட்டி அளித்துள்ளார். 

‘’கொடநாட்டில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளை நாடகம் நடந்துள்ளது. ஆவணங்கள் கைக்கு வந்ததும் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார் பத்திரிகையாளர் மேத்யூ. இதற்கும் விளக்கம் சொல்லப்படவில்லை. “கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்ததில் இருந்தே யாரிடமும் தினேஷ் சரியாகப் பேசவில்லை. தற்கொலை செய்துகொண்ட நாளில் யாரிடமோ தினேஷ் அதிக நேரம் பேசினார்” என்று தினேஷ் உறவினர்கள் சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

சயன், மனோஜ் ஆகிய இருவரின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லாத முதலமைச்சர், இவர்கள் இருவருக்கும் ஜாமின் வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர்கள் குறித்து வேண்டுமென்றே அவதூறு கிளப்பி வருகிறார். அந்த வழக்கறிஞர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் போலக் காட்டி வருகிறார். குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக அந்தக் குற்றவாளிக்கும் வழக்கறிஞருக்கும் தொடர்பு என்று சொல்ல முடியுமா? 

சயனுக்கோ மனோஜ் என்பவருக்கோ கனகராஜ்க்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? அவர்களைப் பாதுகாப்பது என்பது சட்டப்படியான நடவடிக்கை தான். அதனை எந்த வழக்கறிஞரோ, ஏன் திமுக வழக்கறிஞரே செய்திருந்தாலும் தவறு அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் தான் உதவி செய்கிறார்களே தவிர, வேறு உதவிகள் செய்யவில்லை என்பதை உணர வேண்டும்; 

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளையெல்லாம் வருசைப்படுத்தித் தொகுத்து ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். குடியரசுத்தலைவருக்கோ மத்திய அரசுக்கோ அவர் அனுப்பினாரா, விசாரித்தாரா என்று தெரியவில்லை. இதுவரை அனுப்பாவிட்டால் இனியாவது அவர் அனுப்ப வேண்டும் என்று சட்டம் அறிந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள், நாங்களும் எதிர்பார்க்கிறோம். எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக் கொண்டே கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை முதல்வர் பழனிசாமி மிரட்டி வருவது நியாயமா? என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT