விடுதலைப்புலிகள் சிறையிலிருந்து தப்பிய விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
விடுதலைப்புலிகள் சிறையிலிருந்து தப்பிய வழக்கில் சிறை வார்டன்களை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை
விடுதலைப்புலிகள் சிறையிலிருந்து தப்பிய வழக்கில் சிறை வார்டன்களை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை சென்டரல் ரயில் நிலையம் எதிரில் மத்திய சிறைச்சாலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சதீஷ், பிரதாப், சண்முகம், விக்கி, ராஜ்குமார், சண்முகவேல், பாலன், குட்டி, பாலேந்திரன் ஆகிய 9 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு, கள்ளச்சாவியைப் பயன்படுத்தி இந்த 9 பேரும் சிறையில் இருந்து தப்பினர். இதுதொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் தப்பியோடியவர்களைத் தேடினர். தப்பியோடியவர்களில் குட்டி, சண்முகவேல் ஆகிய இருவரும் சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டனர். பாலன் மற்றும் பாலேந்திரன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர், மற்ற 5 பேர் இலங்கைக்கு தப்பிச் சென்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு கியூ பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தப்பியோடியவர்களுக்கு உதவியாக இருந்ததாக, விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளர் தளிகுமார், சிறை வார்டன்கள் தீனதயான், வேலாயுதபாணி, செலிக்கா மஸ்தான், அண்ணாதுரை ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பாலன் மற்றும் பாலேந்திரன் ஆகிய இருவருக்கும் 14 மாத சிறை தண்டனை விதித்தது. மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலை செய்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விரைவு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கியூ பிரிவு போலீஸார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ரவிச்சந்திரன், சிறை வார்டன்கள் மற்றும் தளிகுமார் தரப்பில் வழக்குரைஞர்கள் வி.இளங்கோவன், விஜய் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சிறையில் இருந்தவர்களுக்கு சயனைட் குப்பியும், கள்ளச்சாவியும் தளிகுமார் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறையில் உள்ளவர்களைப் பார்க்க வருகின்றவர்கள் கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருள்களும் சிறைக் கண்காணிப்பாளர் வழியாகத்தான் கைதிகளுக்கு கொடுக்க முடியுமே தவிர நேரடியாகக் கொடுக்க முடியாது. இந்தச் சூழலில் சயனைட் குப்பி, கள்ளச்சாவி யார் மூலம் கொடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் அரசு தரப்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சிறைத் துறையில் உள்ள கடைநிலை ஊழியர்களான 5 வார்டன்கள் மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை.
எனவே, இதனை ஏற்க முடியாது. ஆகவே இந்த விவகாரத்தில் அனைவரையும் விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது தான். எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.