10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை: வானூர்தி-ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கையில் தகவல்
பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான பல்வேறு அம்சங்களுடன், வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கை
பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான பல்வேறு அம்சங்களுடன், வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இந்தக் கொள்கையானது, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்பட்டது. இக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
வானூர்தி மற்றும் ராணுவத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது.
வானூர்திகளைப் பொறுத்தவரையில், அதன் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி அனைத்தையும் மேற்கொள்ள இந்தக் கொள்கை வழிவகுக்கிறது. பயணிகள் மற்றும் பாதுகாப்பு என இருபெரும் பிரிவுகளுக்கு வானூர்திகளை உற்பத்தி செய்யலாம். இந்தத் துறையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 35,656 கோடி முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் அளவை இரட்டிப்பாக்கவும் இக்கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கொள்கையின் வாயிலாக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் உற்பத்தியில் மிகவும் வலிமையான மாநிலமாகத் திகழ்கிறது. இது வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக்கான வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது.
வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தியில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒப்பந்த மற்றும் வெளிப்பணியின் மூலமாக நியமிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தைத் தாண்டி இருக்கக் கூடாது.
ஒப்பந்த மற்றும் வெளிப்பணி அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்கள் உற்பத்தி ஆலைகளுக்கு உள்ளேயே பணியமர்த்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் எங்கெங்கு: வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்திக் கொள்கையின்படி சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி மாவட்டங்களில் வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக்கான ஆலைகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கலாம்.
வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்படும் தொழில் ஆலைகளுக்குத் தேவையான ரயில் போக்குவரத்து, சாலை, வான்வெளி போக்குவரத்து சேவைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தரும்.