முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டார் சி.வி. சண்முகம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்ற உண்மையை தமிழக சட்டத் துறை சண்முகம் மறைத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்ற உண்மையை தமிழக சட்டத் துறை சண்முகம் மறைத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, தமிழக அரசின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். ஆனால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை சட்டத் துறை அமைச்சர் மறைத்துவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம், நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை; நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு சட்டத் துறை அமைச்சர் கொடுத்த பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் சட்டத் துறை அமைச்சர் சண்முகம் என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, நீட் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.