தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக சுகாதாரத்துறைச் செயலரிடம் பதில் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN


எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பட்டியலில்  வெளிமாநில மாணவர்களை நீக்கி, புதிய கலந்தாய்வு பட்டியலை வெளியிடக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறைச் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 85 சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.  ஜூலை 6ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஜூலை 8 ஆம் தேதி இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 15 ஆம் தேதி தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 
தனியார் மருத்துவ சுய நிதி கல்லூரிகளின், நிர்வாக ஒதுக்கீடு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. இதனால் நிர்வாக ஒதுக்கீட்டில் வெளி மாநிலத்திவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். இவர்கள், தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு, வெளி மாநிலங்களுக்கு சென்றுவிடுவர். இதனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை.
எனவே, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 20-ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க வேண்டும். புதிய கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக சுகாதாரத்துறைச் செயலரிடம் இது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT