தமிழ்நாடு

பக்தர்கள் வருகையால் திணறும் காஞ்சிபுரம்

DIN

காஞ்சிபுரம்: அத்திவரதர் பெருவிழாவையொட்டி லட்சக்கணக்கானோர் வருகையால் காஞ்சிபுரம் நகரம் திணறி வருகிறது. 

அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், காஞ்சிபுரம் நகரம் திணறி வருகிறது. பெருவிழாவின் 18-ஆவது நாளான வியாழக்கிழமை வழக்கமாக வரும் கிழக்கு, வடக்கு, தெற்கு மாடவீதிகளில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கிழக்கு கோபுர நுழைவுப்பகுதிக்கு வந்தனர். 

அதிகாலை முதலே பக்தர்களின் வருகை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது. ஏற்கெனவே, இரவு நேரத்தில் தரிசனம் செய்த முடியாதவர்களும் இதில் இணைந்துகொண்டனர். அதிகாலை 4.40 மணிக்கு கிழக்கு கோபுர பொதுதரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

வாலாஜாபாத் சாலை முதல் சின்ன காஞ்சிபுரம் வரை: அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை மட்டும் 2.50 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை விஞ்சும் அளவுக்கு வியாழக்கிழமை காலை பக்தர்களின் வருகை மூன்று மடங்காக காணப்பட்டது. 

குறிப்பாக, வாலாஜாபாத் சாலை, திம்மராஜன் பேட்டை, கருக்குப்பேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர், வெளியூர் வாகனங்கள் முந்திச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுமார் 10 கி.மீ. தொலைவுக்கும் மேலாக வாகனங்கள் சாலையில் நின்றன. 

கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால், வாலாஜாபாத் பகுதியிலிருந்து சின்ன காஞ்சிபுரம் வருவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆனது என வாகனஓட்டிகள் தெரிவித்தனர்.

இதனால், திருவீதிப்பள்ளம், பெரியதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. 

வாகன நெரிசல் காரணமாக பச்சையப்பன் ஆடவர் கல்லூரி தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து சிற்றுந்துகளில் செல்வதும் கடினமானது. இதையடுத்து வடக்கு, தெற்கு, கிழக்கு மாடவீதிகளில் பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. இதனால், காலை 8 மணியிலிருந்தே பக்தர்கள் நெரிசல் மாடவீதிகளில் பெருமளவு காணப்பட்டது.    

ஊதா நிறப் பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதர் வியாழக்கிழமை ஊதா நிறப்பட்டாடையில் காட்சியளித்தார். செண்பகப்பூ, துளசி, மல்லிகை, மரிக்கொழுந்து, தாமரை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

காவல்துறையினர் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம்: நாள்தோறும் முக்கியஸ்தர்கள் வரிசையில் வருவோர் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் திரளானோர் வந்து செல்கின்றனர்.  அதிலும், அனுமதிச் சீட்டு இன்றி வரும் காவல்துறையினர் குடும்பத்தினருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு நடத்தினார். அப்போது, அனுமதிச் சீட்டு இல்லாதோர் யாரையும் கட்டாயம் அனுமதிக்கக்கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக உதவியாளர்களை முக்கியஸ்தர்கள் வரிசையில் நின்று கண்காணிக்க உத்தரவிட்டிருந்தார். அனுமதிச் சீட்டு இன்றி காவல்துறையினர் சிலரை உள்ளே அனுமதித்தனர். இதேபோல், தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், நீதித்துறையினர், இதர அரசுத்துறையினரின் பரிந்துரையின் பேரில் நூற்றுக்கணக்கானோர் அனுமதிச் சீட்டு இன்றி சென்று வருகின்றனர். அந்த நேரத்தில் அனுமதிச் சீட்டு வைத்துள்ளோரை வெகு நேரம் நிறுத்தி அனுப்புகின்றனர். 

தரிசனத்துக்கு 8 மணிநேரம்: பக்தர்கள் கிழக்கு கோபுரத்திலிருந்து வஸந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை அதிகபட்சமாக 8 மணிநேரத்திலும், குறைந்த பட்சமாக 4 மணிநேரத்திலும் தரிசனம் செய்தனர்.

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை: வியாழக்கிழமை காலை முதலே ஆயிரக்கணக்கானோர் சுமார் 2 கி.மீ.  நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்குள்ளாகவே சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். இதையடுத்து, மாலை 5 மணிக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ததாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.  

முக்கியஸ்தர்கள் தரிசனம்: அத்திவரதரை நடிகர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினர், தொழிலதிபர்  ஏ.சி.முத்தையா உள்ளிட்ட பலர் வியாழக்கிழமை தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT