தமிழ்நாடு

ஜெயலலிதா சொத்துகளின் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளின் தற்போதைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர்  தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் திரட்சை தோட்டம், பங்களா, சென்னையில் போயஸ் தோட்ட இல்லம், நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் என ரூ. 913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன.
இந்தச் சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித் துறை  தாக்கல் செய்த பதில்மனுவில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி, செல்வ வரி பாக்கித் தொகைக்காக அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபா, தீபக் ஆகியோர்தான் வாரிசுகள். 
எனவே, வருமான வரி பாக்கியை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர். ஆகவே தீபா, தீபக்கை வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை மட்டுமே நியமிக்க வேண்டும். ஏற்கெனவே இந்த சொத்துகள் அனைத்தும் சொத்தாட்சியரின் பொறுப்பில் உள்ளன. எனவே, இவர்கள் இருவரும் வாரிசு உரிமை கோர முடியாது என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தீபாவும், தீபக்கும் வாரிசுகள் இல்லை என்றால், ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் மனுதாரரின் நோக்கமா என கேள்வி எழுப்பினர்.
அப்போது அமலாக்கத் துறை சார்பில், ஜெயலலிதா மீது தற்போது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த வீடு மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பது குறித்த விவரங்களை வருமான வரித் துறை தாக்கல் செய்யவும், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணி தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தமிழக அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT