தமிழ்நாடு

மதுரையில் வைகைப் பெருவிழா தொடங்கியது

DIN


மதுரையில் வைகைப் பெருவிழா மற்றும் அகில பாரதிய துறவியர் மாநாடு புதன்கிழமை தொடங்கியது. 
மதுரையில்  அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வைகைப் பெருவிழா மற்றும் அகில பாரதிய துறவியர்கள் மாநாடு மதுரை புட்டுத்தோப்பு ஸ்ரீ புட்டு சொக்கநாதர் கோயில் அருகே புதன்கிழமை தொடங்கியது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு ஆதீனங்கள், மடாலயங்களின் தலைவர்கள், நாடு முழுவதும் இருந்து துறவியர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் தொடக்கமாக வைகை ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட  கங்கை, யமுனை, கோதாவரி உள்ளிட்ட புனித தீர்த்தக் கிணறுகளுக்கு வேள்வி வழிபாடு மற்றும் கலச பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் துறவியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக இணைப் பொதுச் செயலர் மிலண்ட் பாரண்டே பேசியது:
நதிகளின் புனிதத் தன்மையை மறந்து வரக்கூடிய சூழலில், வைகைப் பெருவிழாவை துறவியர்கள் நடத்துவது மிகவும் பொருத்தமானது. 
இறைவனின் ஒவ்வொரு படைப்புகளும் நீரை ஆதாரமாகக் கொண்டவை என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
நதிக் கரைகளில் இருந்து தான் மனித வாழ்க்கைத் தொடங்கியிருக்கிறது. சூரிய ஒளி, நீர், காற்று இவற்றுக்கு நாம் எந்த செலவும் செய்வதில்லை. ஆனால், அவை இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை. ஆகவே தான் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
சமூகத்தில் நிலவிய தீண்டாமையை அகற்றி இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற நிலையைக் கொண்டு வந்தவர் ராமானுஜர். அவரைப் போல ஸ்ரீ நாராயண குரு,  காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் சுவாமி தயானந்த சரஸ்வதி, ஸ்ரீ அரவிந்தர் உள்ளிட்டோர் இந்து மதத்தில் சமூக ரீதியிலான பிரிவினைகளை அகற்றுவதில் பெரும் பங்காற்றினர். துறவியர்கள், ரிஷிக்களின் தவ வலிமையால் தான் இந்து மதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமூகத்தில் வெறுப்புணர்வை மேலோங்க விடாமல் தடுத்து, இந்துக்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க வேண்டும் என்றார்.
வழிபாடு என்ற முறையில் இயற்கையைப் பாதுகாத்து வருகிறோம். இயற்கையைப் பாதுகாத்தால், அது நமக்கு எல்லா வளங்களையும் தரும் என்று மன்னார்குடி ஸ்ரீ செண்ட அலங்கார செண்பகராம ஜீயர் சுவாமிகள் குறிப்பிட்டார். 
 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செ. ராஜேந்திரன் பேசுகையில், மதுரை என்பது நகரின் பெயர் மட்டுமல்ல. இது நமது பண்பாடு, நாகரிகத்தின் அடையாளம். நதி உள்ளிட்ட இயற்கை வளங்கள் மதம் அல்லது மார்க்கம் சார்ந்தது அல்ல. இயற்கையின் மீது அனைத்து மதங்களுக்கும் உரிமை உள்ளது என்றார்.
 சிவானந்த தபோவனம் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா, ஆனைகட்டி ஆசிரமம்  சுவாமி ராமன், சுவாமி ராமானந்தா உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள், மடாலயங்களின் தலைவர்கள் பேசினர். 
 ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி, விசுவ ஹிந்து பரிஷத் தமிழக-கேரள மாநிலங்களின் அமைப்புச் செயலர் பி.எம். நாகராஜன், மதுரை மாவட்ட தலைவர் ஆர்.கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்வில்,  தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் சுவாமிகள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

 மதுரையில் புதன்கிழமை தொடங்கிய வைகைப் பெருவிழாவில் 
துறவியர் மாநாட்டில் பேசுகிறார் விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக இணைப் பொதுச் செயலர் மிலண்ட் பாரண்டே. உடன் (வலமிருந்து) ஆனைகட்டி ஆசிரமம் ராமன் சுவாமிகள், மன்னார்குடி ஸ்ரீ செண்ட அலங்கார செண்பகராம ஜீயர் சுவாமிகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன், ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி உள்ளிட்டோர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT