ஜாதி சான்று வழங்காததால் பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்!
தமிழக அரசு ஆணை வெளியிட்டும் "சீர்மரபினர் பழங்குடியினர்' என்ற பெயரில் ஜாதி சான்று வழங்கப்படாததால் 68 ஜாதியினர் மத்திய அரசின் சலுகைகளைப் பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
கடலூர்: தமிழக அரசு ஆணை வெளியிட்டும் "சீர்மரபினர் பழங்குடியினர்' என்ற பெயரில் ஜாதி சான்று வழங்கப்படாததால் 68 ஜாதியினர் மத்திய அரசின் சலுகைகளைப் பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
சமுதாயத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம் போக எஞ்சியுள்ள 69 சதவீத இடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் பிரித்து வழங்கப்படுகின்றன. இதில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீதமும், அருந்ததியினருக்கு 3 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மத்திய அரசு சார்பில் இட ஒதுக்கீடானது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதமும், பட்டியல் இனத்தவர்களுக்கு 15 சதவீதமும், பட்டியல் பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறும் வகையில் தமிழகத்தில் 68 ஜாதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களுக்கு 1979-ஆம் ஆண்டு வரை சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரில் ஜாதி சான்று வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தச் சான்று தற்போது சீர்மரபினர் சமுதாயம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இவர்கள் தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற்றபோதிலும் மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர். இதனால், தமிழகத்தில் 68 ஜாதியினர் மத்திய அரசின் பழங்குடியினருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியவில்லை.
இதுகுறித்து வீர போயர் இளைஞர் பேரவையின் கடலூர் மாவட்டச் செயலர் ஆர்.ஆனந்தன் கூறியதாவது: தமிழகத்தில் போயர், ஒட்டர், மறவர்கள், வேட்டுவக் கவுண்டர், ஊராளிக் கவுண்டர், குறவர்கள், அம்பலகாரர் உள்ளிட்ட ஜாதிகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 68 ஜாதியினர் (மாவட்டம், வட்டம் வேறுபாடு உண்டு) சீர்மரபினர் பழங்குடியினர் என்ற ஜாதி சான்றிதழை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே பெற்று வந்தனர். ஆனால், இந்தச் சான்று 1979-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டு, சீர்மரபினர் சமுதாயமாக மாற்றி வழங்கப்பட்டது. எனவே, இதனை மாற்ற வேண்டுமென வீர போயர் இளைஞர் பேரவை, சீர்மரபினர் நலச் சங்கத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்து போராடியதன் பலனாக தமிழக அரசு 2018-ஆம் ஆண்டு இதுதொடர்பான ஆய்வுக்கு குழு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கையில் மீண்டும் 68 ஜாதியினருக்கும் சீர்மரபினர் பழங்குடியினர் என்ற ஜாதிச் சான்று வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அதற்கான அரசாணையை தமிழக அரசு 4.3.2019 அன்று வெளியிட்டது. ஆனாலும், தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இந்தச் சான்று வழங்கப்படவில்லை. இந்தச் சான்றுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும், தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, மாவட்டம் முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தி மனு அளித்துள்ளோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்தச் சமுதாயத்தினருக்கு மத்திய அரசு அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,200 கல்வி உதவித் தொகையும், 9-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,500 கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்புக்கும், விடுதியில் தங்கிப் படிப்பதற்கும் ரூ.3.50 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்பட பல்வேறு பணி வாய்ப்புகள் கிடைப்பதோடு, சட்டப் பேரவை, மக்களவையிலும் இடஒதுக்கீடு அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீட்டைபெற்று மக்கள் பிரதிநிதித்துவத்தையும் பெற முடியும். இதனால், தமிழகத்திலிருந்து கூடுதலாக ஆட்சிப் பணிக்கு இளைஞர்கள் தேர்வாக முடியும். சீர்மரபினர் பழங்குடியினர் என்ற ஜாதி சான்று வழங்குவதால் தமிழக அரசுக்கு கூடுதலாக எந்த நிதிச்சுமையும் ஏற்படப்போவதில்லை. எனவே, இந்தச் சான்றை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்றார் அவர்.