முன்னாள் மேயர் கொலை வழக்கு: விசாரணையின் ஆரம்பமே அதன் மையப்புள்ளியான விநோதம்!
திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (35) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (35) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் நடந்து விசாரணையைத் தொடங்கியது முதலே காவல்துறையின் சந்தேகப் பார்வை சீனியம்மாளைச் சுற்றியே இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியும் அவர்களுக்கு சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் விசாரணையில் தேக்கம் ஏற்பட்டது.
ஆனால், ஆரம்பித்த புள்ளியிலேயே வந்து நிற்பது போல விசாரணையும், கடைசியாக வந்து நின்றது சீனியம்மாளின் மகனிடம்தான்.
விசாரணையில் சீனியம்மாள் மீதே ஆரம்பத்தில் இருந்து சந்தேகப் பார்வை திரும்பியது ஏன் என்பது குறித்து ஒரு சிறிய விவரம்...
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர், வீட்டுப் பணிப்பெண் கொலைச் சம்பவம் நடந்த போது நெல்லையில் செல்போன் டவரில் பதிவான புதிய தொலைபேசி எண், அதன் பிறகு மதுரையில் சீனியம்மாள் வீட்டுக்கு அருகே இருந்த செல்போன் டவரில் பதிவானதுதான் முதல் சந்தேகம்.
அடுத்து, உமா மகேஸ்வரி கொலை நடந்த போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த வாகனம், நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்றுள்ளது. இதுதான் விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் கிடைத்தத் தகவல்கள்.
இதன் அடிப்படையில்தான் சீனியம்மாளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், பணம் கொடுக்கல் வாங்கல் அளவுக்கு தங்களுக்குள் பழக்கம் இல்லை என்று சீனியம்மாள் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் காவல்துறையினர் மேலும் ஆதாரங்களைத் திரட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பிறகுதான், அந்த வாகனம் யார் பெயரில் இருக்கிறது என்ற தகவலும், செல்போன் எண் யார் பெயரில் இருக்கிறது என்ற தகவலும் மிகச் சரியான ஆதாரங்களாக சிக்கியது. இரண்டுமே சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் பெயரில் இருந்ததுமே, அவர் சுற்றி வளைத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.
தொடர் விசாரணையில், அவர் தானே இந்த 3 கொலைகளையும் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ரத்தக்கரை படிந்த ஆடையை சீவலப்பேரி அருகே எரித்ததாகவும் கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், உமா மகேஸ்வரியின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 21 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் அடுத்தபடியாக, இன்று கார்த்திகேயன், கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சம்பவம் நடந்த விதம் குறித்து காவல்துறையினருக்கு நடித்துக் காட்டினார்.
இன்னும் விடை தெரியாத ஒரு பதில் இருக்கு..
நெல்லையில் இரு வேறு இடங்களில் கார்த்திகேயன் இருசக்கர வாகனத்துடன் உள்ள இரு நபர்களிடம் பேசும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. அதுபற்றியும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த கொலையை கார்த்திகேயன் மட்டும் செய்திருப்பாரா அல்லது நெல்லையின் முக்கிய கூலிப் படைக்குத் தொடர்பிருக்கலாமா என்ற அடிப்படையலும் விசாரணை நடந்து வருகிறது.
கூலிப்படை கும்பலின் தலைவர் சிக்கிக் கொள்வார் என்பதால் கார்த்திகேயன் வாக்குமூலம் அளிக்க தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அவர் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீஸார், ரத்தக் கறை படிந்து, பாதி எரிந்த நிலையிலிருந்த அவரது உடைகளை சீவலப்பேரி பகுதியில் மீட்டுள்ளனர். மேலும், சீவலப்பேரி சாலையில் கார்த்திகேயன் மறைத்து வைத்துள்ள 21 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றியவர் உமா மகேஸ்வரி (65). திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 23ஆம் தேதி உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் (72), வீட்டுப் பணிப் பெண் மாரியம்மாள் (40) ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல் 5 நாள்களில் துப்பு எதுவும் துலங்காத நிலையில், கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டாரங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
காட்டிக்கொடுத்த கார்: அப்போது, சம்பவம் நடந்த நாளில் உமாமகேஸ்வரியின் வீட்டருகே கார் ஒன்று சுற்றித் திரிந்ததும், அதில் சென்றவர் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர் தனி ஒருவராகவே 3 பேரையும் கொன்றதாகத் தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டாரங்களில் அடிக்கடி சென்று வந்த கார் யாருடையது என விசாரித்தபோது, அது திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுடையது எனத் தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
நடந்தே சென்ற கார்த்திகேயன்...: உமாமகேஸ்வரியை கொல்லத் திட்டமிட்ட கார்த்திகேயன், தனது காரை என்ஜிஓ காலனி பகுதியில் நிறுத்திவிட்டு 1 கி.மீ. தொலைவு நடந்தே உமா மகேஸ்வரி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, போலீஸாரிடம் சிக்காமலிருக்க செல்லிடப்பேசியை கையில் எடுத்துச் செல்லாமல், காரிலேயே விட்டுச் சென்றுள்ளார்.
உமா மகேஸ்வரியின் வீட்டுக்குள் நுழைந்த கார்த்திகேயன், முதலில் முருகசங்கரனையும், பிறகு உமா மகேஸ்வரியையும் கொன்றுள்ளார். அதைப் பார்த்த பணிப்பெண் மாரியம்மாள் கூச்சலிடவே அவரையும் கொன்றுள்ளார்.
பிறகு, தடயங்களை அழித்துவிட்டு, 21 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.
ரத்தக் கறை படிந்த உடைகள்..: பின்னர், காரில் ஏறி சீவலப்பேரி சாலையில் சென்று, அங்கு நகைகளை மறைத்துவைத்துவிட்டு, ரத்தக் கறை படிந்த தனது உடைகளை சீவலப்பேரி பகுதியில் எரித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில், பாதி எரிந்த நிலையிலிருந்த உடைகளைக் கைப்பற்றியுள்ளோம்.
இதுவரை நடைபெற்ற விசாரணையில், 3 பேரையும் கார்த்திகேயனே கொன்றது தெரியவந்துள்ளது. அரசியல் முன்விரோதம், கொடுக்கல் - வாங்கல் பிரச்னை காரணமாக இச்சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். சீனியம்மாளுக்கு கிடைக்க வேண்டிய மேயர் பதவியை உமா மகேஸ்வரி தட்டிப் பறித்ததாகவும், எம்எல்ஏ சீட்டுக்காக சீனியம்மாள், உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், சீட் கிடைக்காத நிலையில் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே கார்த்திகேயன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கார்த்திகேயன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சீனியம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.