"கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை உழவு மாடுகளும், குதிரைகளும் அதிகமாக இருந்தன. அதனால் நாள்தோறும் உழவு மாடுகள், வண்டியில் பூட்டப்படும் காளைகள் என 10 ஜோடி வரை லாடம் கட்டுவோம். அதேபோல், நாள்தோறும் 10 குதிரைகளுக்கு லாடம் கட்டுவோம். எனினும், தற்போது உழவுப் பணிகளில் காளைகள் ஈடுபடுத்தப்படுவதும், வண்டிகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்படுவதும் குறைந்து வருவதால், லாடம் கட்டும் தொழில் நலிவடைந்து வருவதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்."
விவசாயப் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் காளைகள் மற்றும் சாரட் வண்டிகளில் பயன்படுத்தப்படும் குதிரைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் லாடம் கட்டும் தொழில் நலிவடைந்து வருவதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் உழவுப் பணியை மேற்கொள்ள காளைகள் உறுதுணையாக உள்ளன. விவசாயிகளுக்கும் காளைகளுக்கும் நீண்டகால உறவு இருந்து வருகிறது. அதேபோல், விவசாய பண்ணை வைத்திருப்போர் விளைநிலங்களுக்கு குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் வருவதும் வழக்கம்.
பொதுவாக காளைகளில் உழவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுபவை, வண்டி ஓட்டப் பயன்படுத்தப்படுபவை என இரு வகைகள் உண்டு. விளைநிலங்களை உழவு செய்து விதைப்பு பணியை மேற்கொள்ளவும், சாகுபடி செய்யப்பட்ட தானியங்களை வீடுகளுக்கும், விற்பனை செய்யும் இடங்களுக்கும் கொண்டு செல்வதற்கும் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடுமையான பணியில் ஈடுபட்டு வரும் காளைகளுக்கு அவற்றின் கால்களில் குளம்புகளை சீவி, அவை பாதுகாப்பாக நடந்து செல்வதற்காக லாடம் அடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
மனிதர்கள் தங்கள் கால்களில் கல், முள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக காலணிகளை அணிகின்றனர். அதேபோல், மாடுகள், குதிரை போன்ற விலங்குகள் கரடுமுரடான சாலையைக் கடக்க கால்களில் அடிக்கப்படும் லாடம் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு நவீன மாற்றங்கள் வந்தபோதிலும், நீண்ட காலமாக லாடம் அடிக்கும் நடைமுறை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
காளைகளுக்கு லாடம் கட்டுவது எப்படி என்பது குறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கூறியது:
கயிற்றின் உதவியால் காளையை இழுத்தால் பக்கவாட்டில் சரிந்து படுத்துக்கொள்ளும். அதைத் தொடர்ந்து முன்னங்கால் மற்றும் பின்னங்கால் நான்கையும் கயிற்றால் கட்டிக்கொள்ள வேண்டும். காளையின் உரிமையாளர் மாட்டின் கொம்பையும், தலையையும் அசைக்காமல் பிடித்துக் கொள்வார். அதைத் தொடர்ந்து மாட்டின் நான்கு கால்களின் குளம்புகளில் மண்ணை நீக்கி, உளியால் குளம்புகளை செதுக்கி சமமாக்க வேண்டும். அதன் பின், குளம்புகளில் இரும்பு லாடம் அடிக்கப்படும். இதில் காளைகளுக்கு ஒரு வகை லாடமும், குதிரைகளுக்கு மற்றொரு வகை லாடமும் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை உழவு மாடுகளும், குதிரைகளும் அதிகமாக இருந்தன. அதனால் நாள்தோறும் உழவு மாடுகள், வண்டியில் பூட்டப்படும் காளைகள் என 10 ஜோடி வரை லாடம் கட்டுவோம். அதேபோல், நாள்தோறும் 10 குதிரைகளுக்கு லாடம் கட்டுவோம். எனினும், தற்போது உழவுப் பணிகளில் காளைகள் ஈடுபடுத்தப்படுவதும், வண்டிகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்படுவதும் குறைந்து வருவதால், லாடம் கட்டும் தொழில் நலிவடைந்து வருவதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருவள்ளூர் தேரடி- காக்காளூர் சாலையைச் சேர்ந்த வெங்கடேசன்(70) என்பவர் கூறியதாவது:
திருவள்ளூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை உழவுப் பணிக்கும், மாட்டு வண்டிகளுக்கும் 500 ஜோடி காளைகளும், பாரம்பரியமாக வயல்களை சுற்றிப்பார்க்கும் வகையிலான சாரட் வண்டிகளுக்காக 100-க்கும் மேற்பட்ட குதிரைகளும் இருந்தன. இதனால், அவற்றுக்கு லாடம் கட்டுவதற்கு விவசாயிகள் முன்கூட்டியே தகவல் கூறுவர். அதன்படி, நாங்கள் நாள்தோறும் 10 ஜோடி காளைகளுக்கு லாடம் கட்டுவோம். இதனால் தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டே இருக்கும். காளைகள் மற்றும் குதிரைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், இத்தொழிலை நம்பி பிழைப்பு நடத்துவோரும் குறைந்து விட்டனர்.
லாடம் கட்டும் தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. இப்போது 10 நாள்களுக்கு ஒரு முறை 2 ஜோடி காளை மாடுகள் மற்றும் 2 ஜோடி குதிரைகளுக்கு மட்டுமே லாடம் கட்டுகிறோம். குதிரை மற்றும் ஒரு ஜோடி காளைக்கு லாடம் கட்ட ரூ.500 கூலி வழங்கப்படுகிறது. இந்த வேலை இல்லாத நேரங்களில் விவசாயப் பணிகளுக்கான கதிர் அரிவாள், களைக் கொத்தி மற்றும் செதுக்கி, மண்வெட்டி, கடப்பாரை மற்றும் அரிவாள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம். எங்களுக்கு மே தினம் போன்ற விடுமுறையும் கிடையாது. கடுமையாக உழைத்தால் நாள்தோறும் ரூ.500 முதல் ரூ.600 வரை கூலி கிடைக்கும். இத்தொழிலை பாரம்பரியமாக 4 தலைமுறைகளாக செய்து வருவதால், விடாமுடியாமல் இதில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
திருவள்ளூர் மாவட்டத்தில்....
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருமழிசை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆவடி ஆகிய பகுதிகளில் விவசாயப் பணிகளில் 3 ஆயிரம் ஜோடி காளைகள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. அதேபோல், பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும், விவசாய நிலங்களை சுற்றிப் பார்க்கவும் 600-க்கும் மேற்பட்ட சாரட் வண்டிகள் வரை இருந்தன.
அதனால், இந்த மாவட்டத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் லாடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது காளைகள் மற்றும் குதிரைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. இதனால் லாடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டோருக்கு போதிய வருவாய் கிடைக்காத நிலை தோன்றியுள்ளது. இதனால் பட்டறையில் அரிவாள், கதிர் அரிவாள், மண்வெட்டி, களைக்கொத்தி ஆகியவற்றைத் தயார்செய்யும் தொழிலுக்குச் சென்று விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.