தமிழ்நாடு

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்: அமைச்சர் க.பாண்டியராஜன்

DIN


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகழாய்வுப் பணியை தொடக்கி வைத்துப் பேசியது:
கடந்த  2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை கீழடியில் இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறையினர் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அதில் உறை கிணறுகள், செங்கல் கட்டடங்கள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தந்தத்தால் ஆன பொருள்கள் உள்பட 7,818 தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. இதேபோன்று கடந்த 2018 -இல் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அதில், பாசி மணிகள், தங்கத்தால் ஆன பொருள்கள், மான் கொம்பு, இரும்புக் கருவிகள் உள்பட 5,820 தொல்பொருள்கள் கிடைத்தன. அவை அனைத்தும் நவீன முறையிலான ஆய்வுக்கு உள்படுத்தப்பட உள்ளன. 
இந்நிலையில் தற்போது 5 -ஆம் கட்ட அகழாய்வு பணிகள் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. கீழடியை பொருத்தவரை ஆற்றங்கரை மற்றும் நகர்ப்புற நாகரிகம் கொண்ட இடம். ஆகவே 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணி தரைக்கு கீழே உள்ள கட்டமைப்பை அறியும் பொருட்டு தமிழகத் தொல்லியல் துறை மற்றும் மும்பையில் உள்ள இந்திய புவிக் காந்த விசையியல் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்யப்பட உள்ளன.
இதில் கிடைக்கும் தொல்பொருள்களும், ஏற்கெனவே கிடைத்த தொல்பொருள்களும் கீழடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2 ஏக்கர் 10 சென்டில் அமையவுள்ள அகழ் வைப்பகத்தில் விரைவில் காட்சிப்படுத்தப்படும்.
சிகாகோவில் நடைபெற உள்ள உலக தமிழ் மாநாட்டுக்கு கீழடி என் தாய் மடி என பெயர் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தகு சிறப்பு வாய்ந்த கீழடியின் அகழாய்வுப் பணி எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது. தமிழகத்தில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் 12 பழங்கால கோட்டைகள் சீரமைக்கப்பட உள்ளன. அவற்றுள் சிவகங்கை மாவட்டம், அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியரின் கோட்டையும் ஒன்று.
தமிழகத்தைப் பொருத்தவரை 36 அருங்காட்சியகங்கள் உள்ளன. இதுதவிர, நாமக்கல், திருப்பூர், பெரம்பலூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளன. மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகால் உள்பட 5 அருங்காட்சியகங்கள் உலக தரத்திலான அருங்காட்சியகமாக அமைக்கப்பட உள்ளன. 
அகழாய்வில் கிடைத்த பழங்காலப் பொருள்களை அந்தந்த பகுதியில் காட்சிப்படுத்தும் வகையில் நடப்பாண்டில் தேனி, திருவண்ணமாலை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் அருங்காட்சியகமும், கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம் ஆகிய 4 பகுதிகளில் அகழ் வைப்பகமும் என 6 அருங்காட்சியகங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன என்றார். 
இதில், தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன், மானாமதுரை (தனி) சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், எழுத்தாளரும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான பி.ஆர்.செந்தில்நாதன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி, திருப்புவனம் வட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT