தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: உயர் நீதிமன்றம் கண்டனம்
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீஞ்சூர், நெம்மேலி ஆலைகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற்று வருகிறோம். மேலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பருவ மொழி பொய்த்துப் போனதால் சென்னைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தங்களது கண்டனத்தைப் பதவு செய்தனர். மேலும், ஏரிகளை தூர்வாறவும் ஆக்ரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கை என்ன என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.