தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடப் பணிகள் 5 மாதங்களில் நிறைவடையும்: முதல்வர் பழனிசாமி

DIN


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் 5 மாதங்களில் நிறைவடையும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவு மண்டபப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவர் நிருபர்களிடம் கூறியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும். இந்த நினைவு மண்டபமானது ரூ.50.80 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 
இந்தப் பணிகள் 5 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்.
இதுவரை 60 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இது தொழில்நுட்ப ரீதியிலான கட்டடப் பணி. பல வேலைப்பாடுகளுடன் கூடிய பணியாகும். அத்துடன் புதிய வகையிலான வடிவமைப்பாகும். அதனால்தான் காலதாமதம் ஆகிறது. மக்கள் போற்றும் வகையில் ஃபீனிக்ஸ் வடிவம் போன்ற இந்த நினைவு மண்டபப் பணிகள் 5 மாதங்களில்  நிறைவுபெற்று திறக்கப்படும்.
இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் தனித்தனியாக இங்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்றார் முதல்வர்.
தமிழை மதிப்பவர்கள் நாங்கள்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றபோது, தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, அவர் பதில் அளித்ததாவது:
தமிழ் வாழ்க என கோஷம் எழுப்புவது அவர்களது (திமுக) பாணி. நாங்கள் (அதிமுக) உண்மையைப் பேசுகிறோம். 
ஆனால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிந்தி படித்துள்ளார். யார் படித்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். தயாநிதி மாறன் தான் அவர். 
நாங்கள் பொய் பேசவில்லை. உளப்பூர்வமாக, மனப்பூர்வமாக தமிழை மதிக்கக் கூடியவர்கள். எங்களது உள்ளத்தில் தமிழ்  இருக்கிறது. உங்களைப் போன்றவர்களுக்கு (பத்திரிகையாளர்கள்) இருக்கும் அதே உணர்வுதான் எங்களுக்கும் இருக்கிறது என்றார் முதல்வர் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT