தமிழ்நாடு

நிதிநிலை அறிக்கை: விவசாயிகளுடன் புதுவை முதல்வர் ஆலோசனை

DIN


நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகள், வர்த்தகர்களுடன் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
புதுவையில் முழு நிதிநிலை அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்ய முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். 
இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். 
இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவைக் குழு அரங்கில் விவசாயிகள், வர்த்தகர்களுடன் முதல்வர் நாராயணசாமியும், வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனும் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசியதாவது: புதுவை கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்துவிட்டதாக தெரிவிக்கிறது. ஆனால், புதிதாக கடன் வாங்கச் சென்றால் வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. 
பிற வங்கிகளில் தடையில்லா சான்று பெற்று வரும்படி நிர்பந்தம் செய்கின்றன. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிக்கிம் மாநிலத்தைப் போல, வருகிற 2022-இல் புதுவையை இயற்கை வேளாண் மாநிலமாக அறிவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வசதியாக இயற்கை உரப் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் இருப்பதால், புதுவையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் வகையில் சங்கராபரணி, தென்பெண்ணை மற்றும் அதன் கிளை ஆறுகளில் கூடுதலாக தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். 
காவிரி நீரை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் காரைக்கால் பிராந்திய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஆண்டுதோறும் காவிரி நீர் கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியைக் கருத்தில் கொண்டு  தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் டன்னுக்கு ரூ. 200 வழங்குகின்றன. விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு இந்தத் தொகை கிடைக்கும் நிலையில், புதுவை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே, இந்தத் தொகை கிடைக்க மாநில அரசு உரிய பரிந்துரை கடிதம் அளிக்க வேண்டும்.
புதுவையில் இயற்கை முறையில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதற்கு காந்தி திடலில் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். 
உழவர் சந்தையில் கடை வைக்க முடியாத அளவுக்கு விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதுபோன்ற நெருக்கடி தரும் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் நிச்சயம் இடம் பெறும் என முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT