தமிழ்நாடு

சமூக ஊடகங்களில் அவதூறு: காவல் ஆணையரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

DIN


தனது மகன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனை புதன்கிழமை சந்தித்து புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி திங்கள்கிழமை நள்ளிரவு வேகமாக சென்ற ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது. அதன் பின்னர் அந்த கார், அங்கிருந்த இரு கடைகளின் மீது மோதி, சாலை தடுப்பின் மீது மோதி நின்றது.
இதில் அந்த காரை ஓட்டி வந்த மதுரை அருகே உள்ள வெள்ளங்குடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த புகழேந்தி மகன் நவீன் (29) அதிகமாக மதுபோதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாரை நவீன் மிகவும் அவதூறாகப் பேசியதோடு, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
 இந்தக் காட்சி கடந்த இரு நாள்களாக சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் விபத்து ஏற்படுத்தி, போலீஸாரை அவதூறாக பேசிய நவீன், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் எனவும் தகவல்கள் பரவின.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதனை புதன்கிழமை சந்தித்துப் புகார் அளித்தார். அதில், நீலாங்கரையில் நடைபெற்ற சம்பவத்தில், தனது மகனை வேண்டுமென்றே இணைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில், சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. 
அதில், சமூக ஊடகங்களில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் குறித்து தவறான தகவல்கள் பரவுகின்றன. அந்தச் சம்பவத்துக்கும், அவரின் மகனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT