தமிழ்நாடு

வரக்கூடிய தேர்தல் வாய்ப்புகளில் உரிய ஒதுக்கீடு வழங்கப்படும்: சீட் கிடைக்காத கட்சிகளுக்கு ஸ்டாலின் ஆறுதல் 

DIN

சென்னை: அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல் வாய்ப்புகளில் அரசியல் இயக்கங்களுக்குரிய ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சீட் கிடைக்காத கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்தியில் 5 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவித்து - பொருளாதாரத்தை சீரழித்து - மக்கள் விரோதப் போக்குகளைக் கடைப்பிடிக்கும் பாசிச பா.ஜ.க அரசையும், மாநில உரிமைகளை அடகு வைத்து ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க அரசையும் வீழ்த்துவது ஒன்றே 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒற்றை இலக்காகும். அதற்குத் தோள் கொடுத்து துணை நிற்கும் ஜனநாயக சக்திகளின் துணையுடன் இந்தக் கூட்டணி தேர்தல் களத்தைச் சந்திக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணிக்கும் ஜனநாயக சக்திகளில் சில அமைப்புகளுக்கு தேர்தல் களத்தில் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பதை ஏற்கனவே விளக்கி, அவர்களின் ஆதரவும் தொடர வேண்டும் என்று கோரியிருந்தேன். கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதல் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கும் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் மற்ற நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து தங்கள் எண்ணங்களைத் தெரிவித்து, பாசிச பா.ஜ.க. ஆட்சியை விரட்டுவதற்கு தங்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட்டிருந்தும் இம்முறை எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணிக்குள் தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டதும், அதனை மனிதநேய மக்கள் கட்சியினர் ஏற்றுக்கொண்டு தி.மு.க கூட்டணிக்கு எந்தவித நிபந்தனை இன்றி ஆதரவளித்திருப்பதற்கு, மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோலவே, மேலும் பல அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் தேர்தலில் பேட்டியிடும் வாய்ப்பு அமையாத நிலையிலும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்து வருகிறார்கள்.

கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வரும் அரசியல் இயக்கங்களுக்கும் அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தல் வாய்ப்புகளில் அரசியல் இயக்கங்களுக்குரிய ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து, தங்களின் பேராதரவுடன் நாற்பதுக்கு நாற்பது மக்களவை தொகுதிகளையும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதுடன், மக்கள் நலன் சார்ந்த உங்களின் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் என்றும் குரல் கொடுப்போம் என்ற உறுதியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT