தமிழ்நாடு

கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபவேட்டைக்கு ஆதரவாக செயல்படும் மோடியின் பாஜக: கம்யூ., கடும் கண்டனம் 

DIN

சென்னை: கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபவேட்டைக்கு ஆதரவாக மோடியின் பாஜக ஆட்சி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்   மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறுகியுள்ளதாவது:

காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் இயற்கைவளக் கொள்ளைக்கு ஆதரவாக, பாஜக மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 2017 பிப்ரவரியில் வேதாந்த நிறுவனத்திற்கும், ஒ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக உரிமங்கள் வழங்கப்பட்டன.                    

அப்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதித்தால் மத்திய அரசின் காவிரி பாசனப் பகுதியின் உயிராதாரம் பறிபோகும். லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பர். உணவு பாதுகாப்பில் பெரும் பாதிப்பு ஏற்படும், கடல் நீர் உட்புகுந்து, உப்பு மண்ணாகி சாகுபடி ஏதும் செய்ய முடியாத நெருக்கடி ஏற்படும் என்று எடுத்துக் கூறுப்பட்டது.

மேலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படும் போது வெளிப்படும் புகையால் புற்றுநோய், திசுக்கள் அழிவு, சீழ்கட்டி உருவாதல், சுவாச மண்டல உறுப்புகள் பாதிப்பு, சிறுநீரகங்கள் செயலிழப்பு, மூளை நரம்பு மண்டலங்கள் சேதமடைதல் என மக்கள் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி  ஹைட்ரோ கார்பன் எடுக்க கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை திரும்பபெற்று, திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத மோடியின் மத்திய அரசு, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தற்போது 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த 10.05.2019 அன்று அனுமதியளித்துள்ளது.

மக்கள் உணர்வு நிலைக்கு எதிராகவும், கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபவேட்டைக்கு ஆதரவாக செயல்படும் மோடியின் பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து வரும் சூழலில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதியளித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக் கண்டிக்கிறது. எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு, இப்பிரச்சனையில் மௌனம் காப்பதன் மூலம் இதனை ஏற்பதற்கு ஒப்புதல் அளிக்கிறதா? என்பதனை தெளிவுபடுத்திட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத இச்செயல்பாட்டினை கண்டிப்பதுடன், காவிரிப்பாசனப் பகுதி மக்களை ஒருங்கிணைத்தும், ஒன்றுபடுத்தியும் கார்ப்ரேட் நிறுவனங்களை வெளியேற்றவும், வேளாண் மண்டலத்தை பாதுகாக்கவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT