முகப்பு
தமிழ்நாடு

3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும்

தெற்கு ரயில்வேயில் நிகழாண்டில் திண்டுக்கல்-பாலக்காடு (179 கி.மீ.), பொள்ளாச்சி-போத்தனூர் (40 கி.மீ.), விருத்தாசலம்-கடலூர் துறைமுகம் (57

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:56 AM
பகிர்:



சென்னை:  தெற்கு ரயில்வேயில் நிகழாண்டில் திண்டுக்கல்-பாலக்காடு (179 கி.மீ.), பொள்ளாச்சி-போத்தனூர் (40 கி.மீ.), விருத்தாசலம்-கடலூர் துறைமுகம் (57 கி.மீ.) உள்ளிட்ட 3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப் பணிகளை செயல்படுத்தி முடிக்க, ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு (கோர்) திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட உள்ளன. 
இது தவிர திருச்சி- தஞ்சாவூர்- நாகப்பட்டினம்- காரைக்கால் (153 கி.மீ.) இடையே ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டத்தில், மீதமுள்ள தஞ்சாவூர்-காரைக்கால் (103 கி.மீ.) இடையே  மின்மயமாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்திய ரயில்வேயில் முக்கிய பொறியியல் பிரிவாக, ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு (கோர்) உள்ளது. ரயில்வே பாதைகளில்  மின்மயமாக்கல் திட்டப் பணிகளை முடித்து ஒப்படைப்பது அதன் முக்கியப் பணியாகும். இதன் தலைமையகம் அலகாபாதில் இயங்குகிறது. ரயில்வே பாதைகளில் மின்மயமாக்கல் செய்வதன் மூலம், ரயில்  இயக்கச் செலவுகள் 15 சதவீதம் வரை குறைகிறது. தெற்கு ரயில்வேயில் 2019-20-ஆம் நிதியாண்டில்  1,166 கி.மீட்டருக்கு  ரயில்வே பாதையில் மின்மயமாக்கலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பின் (கோர்) தலைமை திட்ட இயக்குநர் கே.நாகேந்திர பிரசாத் கூறியது: 

தெற்கு ரயில்வேயில் 2019-20-ஆம் ஆண்டில்  ரயில்வே பாதையில் மின்மயமாக்கலுக்கான 9 திட்டங்களுக்கு 2018-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதாவது, சொரனூர்-நிலாம்பூர், கொல்லம்-புனலூர், பொள்ளாச்சி-போத்தனூர், திண்டுக்கல்-பாலக்காடு, திருச்சி-மானாமதுரை-விருதுநகர், சேலம்-விருத்தாசலம்-கடலூர் துறைமுகம், விருதுநகர்-தென்காசி, செங்கோட்டை-தென்காசி-திருநெல்வேலி-திருச்செந்தூர், மதுரை-மானாமதுரை-ராமேசுவரம் ஆகிய 9 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  9 மின்மயமாக்கல் திட்டங்களில், 2019-20-ஆம் நிதியாண்டில்,  திண்டுக்கல்-பாலக்காடு (179 கி.மீ), பொள்ளாச்சி-போத்தனூர் (40 கி.மீ), விருத்தாசலம்-கடலூர் துறைமுகம் (57 கி.மீ) ஆகிய 3 திட்டங்களை  செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தஞ்சாவூர்-காரைக்கால் (103 கி.மீ.) இடையே ரயில்பாதையில் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

நிகழாண்டில் நடைபெறவுள்ள 3 புதிய திட்டப் பணிகளுக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு விட்டது.  ஓரிரு மாதங்களில் பணிகள்  தொடங்கிவிடும். இதற்கு முன்பு, ஒவ்வொரு பணியையும் தனித்தனியாக செய்வர். ஆனால், இப்போது பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (இபிசி) ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த நிறுவனம் அனைத்துப் பணிகளையும் கவனிக்கும். அதேநேரத்தில், தஞ்சாவூர்-காரைக்கால் (103கி.மீ.) இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கல் திட்டப் பணியை பழைய ஒப்பந்த நிறுவனமே  மேற்கொள்ளும் என்றார் அவர்.

சேலம்-கரூர் மின்மயமாக்கல் நிறைவு: ஈரோடு-கரூர்-திருச்சி,  சேலம்-கரூர்- நாமக்கல் (300 கி.மீ.) இடையிலான மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம்  ஒப்புதல் அளித்தது. இதில்,  ஈரோடு-கரூர்-திருச்சி(141 கி.மீ), கரூர்-திண்டுக்கல் (72 கி.மீ) இடையே ரயில்பாதையில்  மின்மயமாக்கல் பணி 2017-18-ஆம் நிதியாண்டில் முடிவடைந்தது.  2018-19-ஆம் நிதியாண்டில், சேலம்-கரூர்(84 கி.மீ.),  திருச்சி-தஞ்சாவூர் (50 கி.மீ) இரண்டு பாதைகளில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்தது. இதையடுத்து பாதுகாப்பு ஆணையர் ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் இந்த பாதைகளில் ஆய்வு செய்து, ரயிலை இயக்குவதற்கான சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி- தஞ்சை- நாகப்பட்டினம்- காரைக்கால் (153 கி.மீ) இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கல் திட்டத்தில்,  திருச்சி-தஞ்சை இடையே (50 கி.மீ.)  மின்மயமாக்கல் பணியை  2018-19-இல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. அடுத்த 9 மின்மயமாக்கல்  திட்டப் பணிகளை நிறைவேற்றுவதன் மூலமாக, தெற்கு ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி பெரிய அளவில்  நிறைவடைந்து, ரயில் பயணிகளுக்கும் ரயில்வே நிர்வாகத்துக்கும்  அதிக நன்மை கிடைக்கும்.

ஆரம்ப கட்ட நிதி ரூ.45 கோடி: நாடு முழுவதும் 33,000 கி.மீ. ரயில் பாதையில் மின்மயமாக்கல் திட்டப்பணிக்கு ஆரம்பக்கட்ட நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் நடைபெறவுள்ள புதிய மின்மயமாக்கல்  திட்டப்பணிக்கு ஆரம்ப கட்ட நிதியாக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி நடைபெறும் போது, ஒவ்வொரு பகுதியாக நிதி வழங்கப்படவுள்ளது என்று மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.