முகப்பு
தமிழ்நாடு

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம்

வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:11 PM
மாநில தலைமை தேர்தல் ஆணையம்
பகிர்:


புது தில்லி: வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என்றும், டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்வதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

முன்னதாக...

உள்ளாட்சித் விவகாரம் தொடர்பாக வழக்குரைஞர் சி.ஆர். ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. பின்னர், கடந்த ஜூலையில் 15-இல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் தாமதம் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் அல்ல. 

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்தியதன் காரணமாக உருவான சூழல்தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கைக்கான முன்னேற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 

இருப்பினும், மேற்கண்ட காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிக்கையை வெளியிடுவதற்கு மேலும் 60 நாள்கள் தாமதமாகும். 
எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் தேவை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்துமாறு உச்சநீதிமன்றம் ஜூலை 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. 

அதில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. 

இந்நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை முதல் நிலை பரிசோதனை செய்ய வேண்டிய பாரத் மின்னியல் நிறுவனத்தின் (பெல்) தொழில்நுட்பக் குழுவினர் மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அக்டோபர் 28-இல் திரும்புவார்கள் என்று பெல் நிறுவனத்தின் உயரதிகாரி கடிதம் மூலம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளார். 

இதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மேலும் நான்கு வார காலம் அவகாசம் அளிக்கவும், டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிடவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.