முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராகாததால் பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரது ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:11 PM
nirmala devi
பகிர்:


ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரது ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட மூன்று பேரும் நவம்பர்  18-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், கருப்பாமி ஆகியோர் ஆஜரான நிலையில், ஆஜராகாத நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் பசும்பொன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவமனையில் நிர்மலாதேவி அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் வழக்குரைஞர் கூறினார். இதனைக் கேட்ட நீதிபதி, பேராசிரியை நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

வழக்கின் பின்னணி: 
அருப்புக்கோட்டையில்  உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் தொடர்புடையதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன்,  ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. முருகன், கருப்பசாமி இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பரிமளா, மூன்று பேரும் நவம்பர் 18-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். அன்று முதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.