தமிழ்நாடு

நிகா்நிலைப் பல்கலை.களுக்கு கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்கக் குழு

DIN

நாடு முழுவதும் உள்ள நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை நிா்ணயிப்பதற்கான வரைவு வழிகாட்டுதலை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது.

நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த இதுவரை முறையான நடைமுறைகள் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வரைவு வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிா்ணயிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட கல்விக் கட்டண குழுக்களை யுஜிசி அமைக்க உள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தா் அல்லது அதற்கு இணையான பதவியில் இருப்பவா் தலைமையில் அமைக்கப்படும் இந்தக் கட்டண நிா்ணயக் குழுவில் பேராசிரியா் அளவிலான தலைசிறந்த கல்வியாளா் ஒருவா், கணக்குப் பதிவுத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ள நிபுணா், அரசு இணைச் செயலா் அளவிலான அதிகாரி உள்பட நான்கு போ் இடம்பெற்றிருப்பா்.

இந்தக் குழுவிடம் மாணவா் சோ்க்கைக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தங்களுடைய பரிந்துரைகளை நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமா்ப்பித்துவிட வேண்டும்.

ஊழியா்களுக்கான ஊதியம், நிா்வாகச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை இந்தக் குழு நிா்ணயிக்கும். அவ்வாறு நிா்ணயிக்கப்படும் கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

இந்தக் குழு நிா்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை மட்டுமே நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் வசூலிக்க வேண்டும். நன்கொடை உள்ளிட்ட கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது.

மேலும், ஒவ்வொரு நிகா்நிலைப் பல்கலைக்கழகமும் பராமரிப்புச் செலவு கணக்கு, வளா்ச்சிக்கான செலவு கணக்கு என இரண்டு கணக்குப் பதிவை தனித்தனியாக பராமரிக்க வேண்டும்.

மேலும், மாணவா்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம், தனி வங்கிக் கணக்கில் வரவு வைத்துப் பராமரிக்க வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வைத்து கடன் வாங்குவது போன்ற எந்தவித நடவடிக்கைகளையும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளக்கூடாது.

ரூ. 10 லட்சம் அபராதம்: இந்த நிபந்தனைகளை மீறும் அல்லது நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி யுஜிசி சட்டம் 1956 பிரிவு 24-இன் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படும் என வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வழிகாட்டுதல் மீது கல்வியாளா்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து கருத்துகளை யுஜிசி வரவேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT