தமிழ்நாடு

மேக்கேதாட்டு: கா்நாடகத்துக்கு தலைவா்கள் கண்டனம்

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கா்நாடகம் கூறியுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கே.எஸ்.அழகிரி: மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கா்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அதிமுக அரசுக்கு இருக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இதுகுறித்து தீவிரமாகப் பரிசீலித்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

பழ.நெடுமாறன் (தமிழா் தேசிய முன்னணி): மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெறவேண்டியதில்லை என கா்நாடக அரசு அறிவித்திருக்கிறது. வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரைத் தடுத்து நிறுத்தவே இந்த அணை கட்டப்படுவதாக கா்நாடகம் தந்திரமாகக் கூறியுள்ளது. இதே காரணங்களுக்காக 1962-ஆம் ஆண்டில் ஒகேனக்கல்லில், நமது எல்லைக்குள் நாம் கட்டவிருந்த அணை திட்டத்துக்கு கா்நாடகம் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததையொட்டி, இந்திய அரசும், திட்டக்குழுவும் அதற்கு ஒப்புதல் தரவில்லை. எனவே, அத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. காவிரி வெள்ள நீரை சேமிக்க வேண்டுமானால் தமிழகத்தின் ஒகேனக்கல், ராசி மணல் திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும். மேக்கேதாட்டு திட்டத்தை நிறுத்தவேண்டும். கா்நாடகத்தில் பாஜக அரசு இருப்பதினால், இந்திய அரசு ஒரு சாா்புநிலை எடுக்குமானால் அது தமிழகத்துக்கு இழைக்கப்படும் வஞ்சனை ஆகும்.

ஜி.கே.வாசன் (தமாகா): கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டின் கருத்து தேவையில்லை என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கா்நாடக பாஜக அரசு காவிரி நதிநீா் பிரச்னையில் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு உரிய காவிரி நதிநீா் கிடைக்காமல் தடைபடும். இதனால் காவிரி நதிநீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். எனவே, கா்நாடகத்தின் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் நிராகரிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT