தமிழ்நாடு

மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்: ஆளுநர் பேச்சு

DIN

 மகாத்மா காந்தியின் கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரக்கன்று நடும் விழாவைத் தொடக்கிவைத்து மாணவர்களிடம் பேசியதாவது: 
மாணவர்கள் நாளைய நாட்டைக் கட்டமைப்பவர்கள். லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். அருகில் இருப்பவர்கள் நெகிழியைப் பயன்படுத்தினால் கூட அதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். 
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150 -ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடும் நிலையில், அவர் அறிவுறுத்தியுள்ள உழைப்பு இல்லாத செல்வம், மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி, மனிதநேயம் இல்லாத அறிவியல், பண்பாடு இல்லாத அறிவு, கொள்கை இல்லாத அரசியல், நீதி, நெறி இல்லாத வணிகம் மற்றும் தியாகம் இல்லாத வழிபாடு ஆகிய 7 பாவங்களை விலக்கி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். அவரைப்போல எளிமையாகவும், வெளிப்படையாகவும் இருக்கக் கற்றுக்கொள்ள வேணடும். இங்கு நடப்படும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நீங்கள் கல்லூரியை விட்டுச் சென்றாலும் தொடர்ந்து மரக்கன்றுகளை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ பார்த்துச் செல்ல வேண்டும். அனைவரும் குறைந்தபட்சம் தங்களின் பிறந்த நாளுக்காவது  ஒரு மரக்கன்றை நட வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ.குமார், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் க.கு.சுரேஷ், பல்கலைக்கழக மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
10 ஆயிரம் கன்றுகள் நடவு  
வனக் கல்லூரியின் 50 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தில், முதல் கட்டமாக 10 ஆயிரம் கன்றுகள் வியாழக்கிழமை நடவு செய்யப்பட்டன. பூவரசு, வேம்பு, ஈட்டி, சந்தனம், தாண்றிக்காய், அலுஞ்சி, தனுக்கு, இலுப்பை, புங்கன், கருவேல் உள்ளிட்ட 35 வகையான நாட்டு வகை மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஆளுநருடன் சேர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1000 பேர் கலந்து கொண்டு  மரக் கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து, பருவ மழை முடிவதற்குள் 1 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்யப்படும் எனவும், மரங்கள் வளர்ந்து வரும்போது அடர்ந்த வனமாகவும், பிராண வாயு உற்பத்தி மையமாகவும், பல்லுயிர்கள் பெருக்க மண்டலமாகவும் திகழும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT