உன்னதமான திட்டத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி விடக் கூடாது: ராமதாஸ் வேதனை
தமிழில் தீர்ப்புகளை வெளியிடும் உன்னதமான திட்டத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழில் தீர்ப்புகளை வெளியிடும் உன்னதமான திட்டத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் விவரங்களை ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முயற்சியால் தொடங்கப்பட்ட உன்னதமான திட்டம் தொடக்கத்திலேயே நிறுத்தப்படுவது வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற யோசனையை குடியரசுத் தலைவரும் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 17-ஆம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்கள் வெளியிடப்பட்டு வந்தன. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
ஆனால், தொடக்கத்தில் மட்டும் சில நாட்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எந்த தீர்ப்புகளும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவில்லை. ஜூலை தொடக்கத்தில் வழங்கப்பட்ட ஒரு சில தீர்ப்புகள் மட்டும் தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதன்பின் கடந்த 40 நாட்களில் எந்த ஒரு தீர்ப்பும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஒரு வழக்கின் தீர்ப்பு தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு, இதுவரை வேறு எந்தத் தீர்ப்பும் எந்த மொழியிலும் மாற்றப்படவில்லை.
மாநில மொழிகளில் தீர்ப்புகள் வெளியிடப்படாதது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடமிருந்து அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும், விளக்கமும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை தமிழில் உச்சநீதிமன்றம் வெளியிடும்; அதன் மூலம் அவ்வழக்குகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழக மக்களும், வழக்கறிஞர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடுவதற்கு தனித்துவமான மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட சில நடைமுறை சிக்கல்களின் காரணமாகத் தான் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மென்பொருட்கள் மூலம் மொழிபெயர்க்கப் போவதாக செய்திகள் வெளியான போதே அது சாத்தியமல்ல என்றும், அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்றும் நான் கூறியிருந்தேன். தீர்ப்புகளை சட்டம் தெரிந்த மொழிபெயர்ப்பு வல்லுனர்களின் மூலம் மொழிமாற்றம் செய்வது தான் மிகவும் சரியானதாக இருக்கும். இதற்காக சம்பந்தப்பட்ட மொழி பேசும் மாநிலங்களின் உதவியைக்கூட உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம்
எக்காரணத்தை முன்னிட்டும் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடும் திட்டத்தை உச்சநீதிமன்றம் கைவிட்டு விடக்கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.