தமிழ்நாடு

உறவினரின் நிலத்துக்காக மின் கோபுரப் பாதையையே மாற்றிய செயற்பொறியாளர்! அதிர்ச்சியில் விவசாயிகள்!!

DIN

ஊத்துக்குளி அருகே தனது உறவினர் நிலத்தை பாதுகாப்பதற்காக உயர்மின் கோபுரப் பாதையை மாற்றி முறைகேடு செய்த மின் பாதை தொடரமைப்புக் கழக செயற்பொறியாளருக்கு விவசாயிகள் கண்டனம் தெரித்துள்ளனர். 

அரசூர் முதல் ஈங்கூர் வரை செல்லக்கூடிய உயர் மின் பாதைக்கு, ஊத்துக்குளி வட்டம் விஜயமங்கலம் சாலை மேட்டுக்கடை பகுதியில்  மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வரைபடத்தின் படி நேராக வர வேண்டிய இந்த மின் பாதை குறிப்பிட்ட இடத்தில்  வளைவாகச் செல்லும்படி மாற்றி அமைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் விசாரித்தபோது, உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தின் மின் பாதை தொடரமைப்புக் கழக செயற்பொறியாளர் அருளரசன் என்பவர் சுயநல நோக்கத்தில் இந்த முறைகேட்டை செய்திருப்பது தெரியவந்தது. 

 திட்டப்படி நேராகச் செல்லும் வகையில் மின் கோபுரம் அமைக்கப்பட்டால், செயற்பொறியாளர் அருளரசனின்  உறவினரான, பெருந்துறையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான 27 ஏக்கர் நிலத்தின் வழியாகச் செல்லும் எனக் கூறப்படுகிறது. ஆனால் தனது உறவினரின் நிலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின் பாதையை மாற்றி அருகில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நிலத்தின் வழியாக 4 மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 அத்துடன் இந்த 4 மின்கோபுரங்கள் அமைப்பதற்காக சிறு, குறு விவசாயிகளின் நிலத்தில் இருந்த தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. விவசாய சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மின்கோபுரம் அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில் 4 மின் கோபுரங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக செலவிடப்பட்டிருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

 இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட செயற்பொறியாளர் அருளரசன் மீது ஊழல் முறைகேடு குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளின் விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்கோபுரங்களை மாற்றி அமைத்து, அதற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஊத்துக்குளியில் செவ்வாய்க்கிழமை கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

 உயர் மின்கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி நிலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றியச் செயலாலர் வி.பழனிசாமி, உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஈசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர்  கி.வெ.பொன்னையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், விவசாயிகள் சங்க நிர்வாகி சென்னிமலை பொன்னுசாமி, பவானி கவின், பெருமாநல்லூர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

 இக்கூட்டத்தில், மின்கோபுரம் அமைப்பதில் முறைகேடு செய்த அருளரசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தனது உறவினர் நிலத்தை பாதுகாப்பதற்காக உயர்மின் கோபுரப் பாதையை மாற்றி முறைகேடு செய்த மின் பாதை தொடரமைப்புக் கழக செயற்பொறியாளருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT