தமிழ்நாடு

சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN


  தையல்,  ஓவியம், இசை ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளாகியும் பணி நியமனம் செய்யப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 
இந்தத் தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.
எனவே, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் திங்கள்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது:  சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் 2018 அக். 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இதைத் தொடர்ந்து சிலர் வழக்குத் தொடர்ந்தனர். அப்போது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் வழக்கு முடிந்த பின்னர், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர். 
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளிவந்தது
இந்த நிலையில் இசைப் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பிற பாடங்களான உடற்கல்வி, தையல், ஓவியம் ஆகியவற்றுக்கான தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றனர். 
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வு எழுதியவர்களில் தையல் ஆசிரியர் பணிக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதையடுத்து சில நாள்களில் ஓவிய ஆசிரியர்களுக்கான பட்டியலும் வெளியிடப்படும். தையல், இசை, ஓவிய ஆசிரியர்களுக்கான தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு பணி நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெறும்.
உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டபோது, அவர்களுக்கான கல்வித் தகுதியில் சில குழப்பங்கள் இருந்தன. எனவே மீண்டும் அவர்களுக்குச் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்குரிய அனுபவத்துக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பின்னர் புதிய பட்டியல் வெளியிடப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT